×

டி.கே.சிவகுமார் மீதான ஈடி வழக்கு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத்துறை 2018ம் ஆண்டு பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் பாஜ ஆட்சி இருந்தபோது கடந்த 2017ம் ஆண்டு டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின. வருமான வரித்துறை நடத்திய அடுத்தடுத்த சோதனைகளில் சுமார் ரூ.300 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டி.கே.சிவகுமார் மீது 2018ம் ஆண்டு அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்தது. ₹8.59 கோடி பணம் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2019ம் ஆண்டு டி.கே.சிவகுமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கூட்டுசதி என்ற புகாரை மட்டும் வைத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர முடியாது என்று தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அமலாக்கத்துறை மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி அமர்வு, இந்த வழக்கை பொறுத்தமட்டில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டி.கே.சிவகுமாருக்கு எதிரான நடவடிக்கைகளில் எதுவுமே சட்ட விதிகளின்படி இல்லை. எனவே அதனடிப்படையில், டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டு, இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

The post டி.கே.சிவகுமார் மீதான ஈடி வழக்கு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : D. K. ED ,Sivakumar ,Supreme Court ,Bangalore ,Karnataka ,Deputy ,T. K. ,Enforcement Department ,Karnataka, D. K. ,Shivakumar ,Dinakaran ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...