×

பெயர் பலகை, கொடி கம்பத்தை திரும்ப கொடுத்ததால் வண்டலூர் பூங்கா தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

கூடுவாஞ்சேரி: பெயர் பலகை மற்றும் கொடி கம்பத்தை பூங்கா நிர்வாகம் திரும்ப கொடுத்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொழிலாளர்கள் 7வது நாளாக நடத்திய தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், பூங்காவில் இருந்த தொழிற்சங்கங்களின் பெயர் பலகை மற்றும் கொடி கம்பங்களை பூங்கா நிர்வாகத்தினர் கடந்த 26ம் தேதி இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். இதனை கண்டித்தும், இதனை மீண்டும் திரும்ப கொடுக்க வலியுறுத்தியும் தொழிற்சங்கத்தினர் 70க்கும் மேற்பட்டோர் கடந்த 7 நாட்களாக தொடர் உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இதில் பூங்கா நிர்வாகம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தாததால் ஆத்திரமடைந்த தொழிற்சங்கத்தினர் பூங்கா இயக்குனர் அலுவலகம் முன்பு அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் தலைமையில் பூங்கா இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இரவு அடுப்பு மூட்டி சமைத்து சாப்பிட்டு இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பூங்கா நிர்வாகம் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்றிய நிலையில் அகற்றப்பட்ட பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பங்களை தொழிலாளர்களிடம் பூங்கா நிர்வாகம் ஒப்படைத்தது. இதனை அடுத்து சங்கப் பொது செயலாளர் இரனியப்பன் தலைமையில் பூங்காவில் நுழைவாயில் முன்பு பேர் பலகை மற்றும் கொடி கம்பங்களை தொழிலாளர்கள் நேற்று இரவு அமைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

The post பெயர் பலகை, கொடி கம்பத்தை திரும்ப கொடுத்ததால் வண்டலூர் பூங்கா தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Vandalur Zoo ,Anna Zoo ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை