×

மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் வங்கி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது, யூடியூப் பார்த்து தயாரித்ததாக வாக்குமூலம்

குன்றத்தூர்: பல்லாவரம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட வங்கி ஊழியர் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தனர். பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், சுபம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38). சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகே ஒரு கும்பல் மது அருந்தியவாறு அதிக சத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தது. இதனால், நிம்மதியிழந்த பாக்கியராஜ், அவரது குடும்பத்தினர், இவ்வாறு குடியிருப்பு அருகே மது அருந்தலாமா, எங்காவது ஒதுக்குப்புறமாக சென்று மது அருந்த வேண்டியது தானே என்று கூறி உள்ளனர். இதைக்கேட்டதும் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அன்று இரவு பாக்கியராஜ் குடும்பத்தினர் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடிக்கவே, அதிர்ச்சியடைந்த பாக்கியராஜ் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், வீட்டின் ஜன்னல், கதவில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து, வீடு முழுவதும் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. இதனால் செய்வதறியாது தவித்த பாக்கியராஜ் குடும்பத்தினர், இதுகுறித்து உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து நடத்திய விசாரணையில், பல்லாவரம் சுபம் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (19), கார்த்திக் (20) மற்றும் 17 வயதுடைய 4 சிறுவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் நேற்று தங்களது வீடுகளில் பதுங்கியிருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மது அருந்த விடாமல் தடுத்ததுடன், எங்களை தரக்குறைவாக திட்டியதால் ஆத்திரமடைந்து, அவர்களை பலி வாங்க நினைத்து, அன்று இரவோடு இரவாக யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டு, அதன்படி தயார் செய்து பாக்கியராஜ் வீட்டில் வீசியதாக தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரை புழல் சிறையிலும், சிறுவர்கள் 4 பேரையும் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மது அருந்தியதை தட்டிக் கேட்ட வங்கி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் வங்கி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது, யூடியூப் பார்த்து தயாரித்ததாக வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Athram bank ,YouTube ,Kunradthur ,Pallavaram ,Bagheer ,Atraram bank ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!