×

நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு அறையில் மதுபானம் அருந்தி சமூக விரோதிகள் அட்டூழியம்: பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வகுப்பறையில் கஞ்சா புகைப்பது, மதுபானம் அருந்துவது என பல்வேறு குற்ற செயல்களில் சமூக விரோதிகள் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1,300 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4ம் தேதியும் பொது தேர்வு தொடங்கியுள்ளது. இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்வு தொடங்கப்பட உள்ளது. இதில், மாணவர்கள் பொது தேர்வு எழுதி வரும்நிலையில், அரசு விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்காகவும், இதேபோல் மாணவர்கள் விளையாடுவதற்காகவும் பள்ளியின் கேட் திறந்து விடப்படுகின்றன. இதில் பகல் மற்றும் இரவு நேர வாட்ச்மேன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் வழியாகவும், இதேபோல் சுற்று சுவர் வழியாகவும் எகிறி குதித்து வரும் சமூக விரோதிகள் வகுப்பறைக்குள் புகுந்து கஞ்சா அடிப்பது, மதுபானம் அருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற சமூகவிரவாதிகளை போலீசார் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் பள்ளியை சுற்றி முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த தனியார் தொண்டு நிறுவனங்கள் முன் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

* மதுபானம், காஞ்சா அருந்திய மர்ம நபர்கள்
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் வகுப்பறைக்குள் புகுந்த சமூக விரோதிகள் மாணவர்கள் தேர்வு எழுதி வரும் மேஜைகள் மீது மலம் கழித்து டேபிள் மற்றும் கிளாஸ் போர்டில் பூசி உள்ளனர். மேலும் கஞ்சா, மதுபானம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு பேப்பர்களை தீயிட்டும் கொளுத்தி உள்ளனர்.

இதனால், நேற்று முன்தினம் தேர்வு எழுத வந்த மாணவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும், பிரேயர் நடத்தப்படும் செட்டில் இருந்த மின் வயர்களை அறுத்து நாசப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் அந்த வகுப்பறையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். பின்னர் பினாயில் தெளித்தனர். முன்னதாக வேறொரு வகுப்பறைகளை தயார் செய்து மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்தனர்.

The post நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு அறையில் மதுபானம் அருந்தி சமூக விரோதிகள் அட்டூழியம்: பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Nandivaram Govt.Boys High School ,Guduvanchery ,Nandivaram Government Boys High School ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...