×

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மோதல் பல மாநிலங்களில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் : பஞ்சாயத்தை தீர்க்க மகாராஷ்டிரா விரைந்த அமித் ஷா

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை உடைத்து புதுப்புது கூட்டணியை ஏற்படுத்தியுள்ள பாஜக, தற்போது அந்தக் கூட்டணிகள் அதிக சீட்டும், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை மட்டும் கேட்பதால், கூட்டணிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் மேலிடம் திணறி வருகிறது. இதனால் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாஜக 9 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அதில் பல மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிரா, பீகார், அரியானா, நாகாலாந்து, மேகாலயா, சிக்கிம் ஆகிய 6 மாநிலங்களில் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. அதில் இந்த 6 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தன. எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்து, கட்சிகளை உடைத்து, புதிய கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளன. தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் ஒவ்வொரு கூட்டணிக் கட்சிகளும் அதிக தொகுதியும், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளையும் கேட்பதால், பங்கீட்டை முடிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. ஆனாலும் பாஜக அதிக செல்வாக்காக உள்ள மாநிலங்களில் மட்டும் 195 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிக பிரச்னைக்குள்ளான மாநிலமாக இருப்பது மகாராஷ்டிராதான். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக (துணை முதல்வர் பட்நாவிஸ்), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார்) கூட்டணி ஆட்சி மாநிலத்தில் நடக்கிறது. லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

ஆனால் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அந்த பஞ்சாயத்தை தீர்ப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா வந்துள்ளார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால், இந்த பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. தேர்தல் பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வந்துள்ளார். தேர்தல் அட்டவணை வெளியாகும் முன், கூட்டணி தொகுதி பங்கீட்டை அவர் தீர்ப்பார். அகோலா, புல்தானா, அமராவதி, சந்திராபூர், வார்தா போன்ற முக்கிய தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் பிரச்னை நீடிக்கிறது. தற்போது பாஜ ஆதரவு சுயேச்சை எம்பியும் நடிகையுமான நவ்நீத் ராணாவின் அமராவதி தொகுதிக்கு, கூட்டணி கட்சிகளான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் போட்டி போட விருப்பம் தெரிவித்துள்ளன. எங்களது கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட நவ்நீத் ராணா ஒப்புக்கொண்டாலும் கூட, அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதாவது ஜாதி சான்றிதழை அவர் போலியாக வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் புல்தானா, சந்திராபூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிரச்னை உள்ளது. மொத்தமுள்ள 49 தொகுதிகளில், 45 இடங்களை கைப்பற்ற வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. எங்களது கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சி (ஒன்றிய அமைச்சர் அத்வாலே) உள்ளதால், அவர்களும் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்னை செய்து வருகின்றனர். மராத்தா இடஒதுக்கீடு பிரச்னையானது ஆளுங்கட்சிக்கு தலைவலியாக உள்ள நிலையில், மராத்தா மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்று கூட்டணி கட்சிக்குள் குழப்பம் நீடிக்கிறது. இத்தனை பிரச்னைகளையும் அமித் ஷா தீர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனர்.

அதேபோல பீகாரில் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைச்சரவையில் முதல்வராக இருந்த நிதீஷ்குமார், திடீரென கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்து முதல்வரானார். அங்கும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், யாருக்கு எவ்வளவு சீட் என்று முடியாமல் உள்ளது. ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக்பஸ்வான் கட்சி, கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 5 எம்பிக்கள் வெற்றி பெற்றனர். சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமாரை காலி செய்வதற்காக பாஜகவின் திட்டப்படி கூட்டணியில் இருந்து வெளியேறி, நிதிஷ்குமார் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் நிதீஷ்குமார் கட்சியும் பல இடங்களில் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இந்த முறை அந்தக் கட்சி பாஜக கூட்டணியில் இருப்பதால் தொகுதிப் பங்கீட்டையும் முடிக்கவில்லை. கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பதையும் முடிவு செய்ய முடியவில்லை. அரியானாவில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காதால் ஜே.ஜே.பி கட்சியுடன் கூட்டணி அமைச்சரவை அமைத்துள்ளது. அங்கு விவசாயிகள் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் அதிமுக எப்படியும் தங்கள் அணிக்கு வந்து விடும் என்பதால் கூட்டணியை அறிவிக்காமல் உள்ளது. கூட்டணிக்கு வருவதாக கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் சேர்க்காமல் உள்ளனர்.

அதேபோல, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜனசேன கட்சியின் இணைந்து போட்டியிட பாஜக விரும்புகிறது. ஆனால் கேட்கிற தொகுதியும் கிடைக்காமல், அதிக சீட்டும் தர சந்திரபாபு நாயுடு விரும்பாததால், கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. கர்நாடகாவிலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ளது. அங்கும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை. இவ்வாறு பெரும்பாலான மாநில கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்ய முடியாததால், பாஜக மேலிடம் திணறி வருகிறது. இதனால் முதல் பட்டியலை வேகமாக வெளியிட்ட பாஜக அடுத்த பட்டியலை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. அதேநேரத்தில் இந்த பிரச்னைக்குறிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தேர்தல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கிவிட்டனர். இதனால் பிரச்னையுள்ள மாநிலங்களில் அமித்ஷா நேரில் தலையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பாஜக கூட்டணிக் கட்சிகளால் சிக்கலில் உள்ளது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post தொகுதிப் பங்கீடு தொடர்பாக மோதல் பல மாநிலங்களில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் : பஞ்சாயத்தை தீர்க்க மகாராஷ்டிரா விரைந்த அமித் ஷா appeared first on Dinakaran.

Tags : BJP ,Amit Shah ,Maharashtra ,New Delhi ,BJP alliance ,Dinakaran ,
× RELATED அமித்ஷா, நட்டா கூட்டணி தலைவர்களுக்கு...