×

அமித்ஷா, நட்டா கூட்டணி தலைவர்களுக்கு பிரசாரம் செய்யாததால் அதிருப்தி; ஏழை அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம்

சென்னை: பாஜக தேசிய தலைவர்களான அமித்ஷா, நட்டா ஆகியோரின் பிரசாரம் தமிழத்தில் முடிந்து விட்டது. ஆனால், கூட்டணிக் கட்சியினருக்கு அவர்கள் பிரசாரம் செய்யாததால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால், அவர்களை திருப்திப்படுத்த நினைத்து, தன்னை ஏழை, 2தகரப் பெட்டியுடன் படிக்க வந்தவன் என்று கூறும் அண்ணாமலை நேற்று ஒரே நாளில் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து 3 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக வளர்ந்து விட்டது. 3வது பெரிய கட்சியாக மாறிவிட்டது. ஆளும் திமுகவிற்கு அடுத்தபடியாக பாஜகதான் உள்ளது என்று டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு அண்ணாமலை வீடியோ காட்டி பில்டப் கொடுத்திருந்தார். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டும் அண்ணாமலையை நம்பவில்லை. அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் மோடி, நட்டா ஆகியோர் அண்ணாமலையின் பேச்சில் மயங்கிவிட்டனர். அதை நம்பி பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் பாஜக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் கூட்டணிக் கட்சியான ஐஜேகே பாரிவேந்தர், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், தென்காசியில் ஜான் பாண்டியன் ஆகியோரும் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அண்ணாமலையை நம்பி பிரதமர் மோடி மட்டும் தமிழத்துக்கு 8 முறை வந்து சென்றுள்ளார். கடைசியாக 15ம் தேதி நெல்லை தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதேநேரத்தில் அமித்ஷாவும் பல முறை தமிழகம் வந்து சென்றார். ஏற்கனவே 2 முறை தமிழகத்தில் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக நேற்று முன்தினம் வந்தார். அன்று அவர் சிவகங்கை மற்றும் தென்காசி, மதுரை ஆகிய இடங்களில் ரோடு ஷோ நடத்துவதாக இருந்தது.

ஆனால் சிவகங்கை பாஜக வேட்பாளர் ₹525 கோடி மோசடி புகார் மற்றும் தென்காசி வேட்பாளர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அமித்ஷா தனது ரோடு ஷோ பிரசாரத்தை ரத்து செய்து விட்டார். மேலும், தேனி, ராமநாதபுரத்திற்கு பல முறை மோடி, அமித்ஷா ஆகியோரது பிரசார நேரம் கேட்டும் அவர்கள் ஒதுக்கவில்லை. இதனால் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் முதல் கட்டமாக டிடிவி தினகரன் போட்டியிடும் தேனி, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு நான் வந்து பிரசாரம் செய்கிறேன் என்று கூறி அண்ணாமலை நேற்று பிரசாரம் செய்தார். அதில் தான் ஒரு ஏழை விவசாயி, தன்னிடம் செலவுக்கு பணம் இல்லை, தான் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் கூட நண்பர் வாங்கிக் கொடுத்தது. தான் குடியிருக்கும் பங்களாவுக்கும், காருக்கும் நண்பர்தான் பணம் ெகாடுக்கிறார். வீட்டு வேலையாட்களுக்கு மற்றொரு நண்பர் பணம் கொடுக்கிறார். தன்னிடம் கையில் காசு இல்லை. 2 தகரப் பெட்டியுடன்தான் படிக்க வந்தேன் என்று கூறி வந்த அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆதரித்து ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதற்காக தனியார் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த அண்ணாமலை, கோவையில் இருந்து தேனிக்கு நேற்று காலை சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தேனியில் டிடிவியை ஆதரித்து பிரசாரத்தை முடிந்தவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர், கோவைக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் சென்று அங்கு பிரசாரம் செய்தார். தமிழக பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை சிறப்பு ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது இல்லை. முதல் முறையாக தமிழக பாஜக தலைவர் ஏழை விவசாயி அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மதுரையில் பேட்டியளித்த அமித்ஷா, அதிமுகவை ஊழல் கட்சி என்று குறிப்பிட்டார். அதிமுகவுக்கு தலைமை தாங்கிய சசிகலாவின் அக்காள் மகன்தான் டிடிவி தினகரன். அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வர், ஒரு முறை துணை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்படி என்றால் அவர்களுக்கும் அந்த ஊழல் குற்றச்சாட்டு பொருந்தும். இதனால்தான் அமித்ஷா அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய முன்வரவில்லை. ஆனால், அமித்ஷாவால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் செலவுகளை டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடுத்தார்களா அல்லது அண்ணாமலையின் நண்பர்கள் கொடுக்கப்போகிறார்களா? வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் தனியார் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் திரட்டிய பாஜக பணத்தில் இருந்து கொடுக்கப்போகிறார்களா என்பது அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய பின்னர்தான் தெரியவரும் என்கிறார் பாஜக மூத்த தலைவர் ஒருவர்.

The post அமித்ஷா, நட்டா கூட்டணி தலைவர்களுக்கு பிரசாரம் செய்யாததால் அதிருப்தி; ஏழை அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Natta ,Annamalai ,CHENNAI ,BJP ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!