×

2014ல் ‘சாய் பே சர்ச்சா’, 2019ல் ‘மெயின் பி சவுகிதார்’ இந்த தேர்தலில் பாஜகவின் ‘மோடி கா பரிவார்’ கோஷம்: பிரசார யுக்தியாக மாறியது லாலு பேசிய வார்த்தை

புதுடெல்லி: மோடிக்கு குடும்பம் இல்ைல என்று லாலு பிரசாத் யாதவ் பேசிய வார்த்தை, இந்த தேர்தலில் பாஜகவின் ‘மோடி கா பரிவார்’ என்ற பிரசார வார்த்தையாக மாறியுள்ளது. காங்கிரஸ் எம்பி ஒருவர் கடந்த 2014 தேர்தலில், மோடி டீ விற்கத்தான் லாய்க்கு என்று கூறினார். அதற்கா ‘சாய் பே சர்ச்சா’ என்ற வார்த்தையை பாஜக பயன்படுத்தியது. அதனை மையப்படுத்தி டீக் கடையில் தனது தேர்தல் பிரசாரத்தை பாஜக மேற்கொண்டது. இந்த பிரசார யுக்தியானது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது, எதிர்கட்சிகள் மோடியை கடுமையாக விமர்சித்த போது, அவர் ‘மெயின் பி சவுகிதார்’ (மக்களின் காவலன்) என்ற பெயரை பயன்படுத்தினார். அந்த வார்த்தையை அடிப்படையாக வைத்து பாஜக பிரசாரம் மேற்கொண்டது. இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க ‘இந்தியா’ கூட்டணி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ‘மோடிக்கு குடும்பம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும்? ராமர் கோவிலை பற்றி பெருமையாக கூறி வருகிறார். அவர் உண்மையான இந்துவும் இல்லை. இந்து பாரம்பரியத்தில், ஒரு மகன் தனது பெற்றோர் இறந்த பிறகு தலையில் மொட்டையடிக்க வேண்டும். தாடியை எடுக்க வேண்டும். ஆனால், அவர் தனது தாய் இறந்தபோது அவ்வாறு செய்யவில்லை’ என்றார்.

இவரது பேச்சு பாஜக தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டது. மோடிக்கு குடும்பம் எதுவும் இல்லை என லாலு கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் தெலங்கானாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டின் 140 கோடி மக்களும் என் குடும்பம்தான். இன்று நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் மோடியின் குடும்பத்தில்தான் உள்ளனர். அவர்களின் குடும்ப அரசியலை நான் கேள்வி கேட்டால், மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள்’ என்றார். மோடி இவ்வாறு கூறியதை அடிப்படையாக வைத்து. ‘மோடி கா பரிவார்’ என்ற பெயரில் பாஜக பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, சமூக வலைதளங்களில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், தங்களின் பெயரோடு சமூக வலைதளங்களில் ‘மோடி கா பரிவார்’ என்ற வாக்கியத்தையும் சேர்த்துள்ளனர். ‘மோடி கா பரிவார்’ என்றால் ‘மோடியின் குடும்பம்’ என்று அர்த்தமாகும். ‘மோடி கா பரிவார்’ என்ற வார்த்தை பாஜகவின் தேர்தல் யுக்திக்கு பயன்படுத்தப்படுவதால், ‘லாலு செல்ப் கோல்’ போட்டுக் கொண்டார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

The post 2014ல் ‘சாய் பே சர்ச்சா’, 2019ல் ‘மெயின் பி சவுகிதார்’ இந்த தேர்தலில் பாஜகவின் ‘மோடி கா பரிவார்’ கோஷம்: பிரசார யுக்தியாக மாறியது லாலு பேசிய வார்த்தை appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Lalu ,New Delhi ,Lalu Prasad Yadav ,Congress ,Lai ,Dinakaran ,
× RELATED கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான...