×

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள் நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள் நிலைமையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த இரு நாட்களாக எடை போடும் பணிகள் தடைபட்டிருப்பதால், விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் குவிந்து கிடக்கின்றன. எடை போடும் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று செஞ்சியில் உழவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு பதட்டத்தைப் போக்கி, இயல்பு நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எடை போடும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மூட்டைக்கு ஒரு ரூபாய் கூடுதலாக கேட்பதாகவும், அதற்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உழவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் உழவர்களின் போராட்டத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது.

இரு நாட்களாக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முடங்கிக் கிடக்கிறது. இதனால் உழவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒன்றான செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் உடனடியாக களையப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தச் சிக்கலில் தலையிட்டு, இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். செஞ்சி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள் நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Senchi regulation sales hall ,Anbumani Ramadoss ,CHENNAI ,BAMA ,president ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...