×

குபேர யோகம் என்ற பெரும் தனயோகம்

ஜோதிடம் என்பது இயற்கையின் காலச் சக்கரம். அந்த காலச் சக்கரத்தின் அடையாளமே ஜாதகக் கட்டம் என்ற எந்திரம். அந்த எந்திரத்தின் மூலம் ஒருவரின் முழுமையும் அறியும் அமைப்புண்டு. அதில், தன வரவையும் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கான குபேரனின் அமைப்பையும் அறிந்துகொள்வதே குபேரயோகம். குபேரன் என்பதற்கு பெரும் செல்வந்தன் என்ற பொருள் உண்டு. நம் எல்லோருக்கும் பெரும் செல்வந்தன் ஆக வேண்டும் என்ற ஆசையுண்டு. நாம் குபேரன் ஆகிவிடுவோமா? என எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். இயற்கைதான் நம்மில் ஒருவரை, குபேரனின் அனுக்கிரகம் பெற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து குபேர சம்பத்தை அளிக்கிறது. அப்படி இயற்கையில், என்ன ஜாதக அமைப்புடன் ஒருவர் இருந்தால் அவருக்கு குபேரயோகம் கிட்டும்.குபேரன் தேவலோகத்தின் செல்வத்திற்கு அதிபதியாக உள்ளான். இவனிடம் உள்ள செல்வங்கள் சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என்பனவாகும். இந்த நவநிதிகள் அனைத்தும் உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த நவநிதிகள் அனைத்தும் மகாலட்சுமியின் அருளால் குபேரனுக்கு கிடைத்தவை. இந்த செல்வங்கள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்ற இருவரால் பாதுகாக்கப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன.

ஜோதிடத்தில் குபேர யோகத்திற்கான அமைப்பு

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தனித்து இருக்குமானால், அவர்கள் தனம் வரும் வழிகள் அறியாமல் தடுமாற்றம் அடைவர். மேலும், வாழ்நாள் முழுவதும் தனக்கு எந்த தொழில் மூலம் தனம் வரும்? யார் மூலம் தனம் வரும்? எப்படி தனம் வரும்? என்ற தேடலில் முழுவதையும் தேடியே களைத்துப் போவர். நவக்கிரகங்களில் பெரும் தனத்தை கொடுப்பதற்கு தனத்திற்கு காரகமாக வருவதற்கு ராகு, சந்திரன், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்களே காரணமாகிறார்கள். ஆனால், ராகு சாயா கிரகமாக இருந்து பெரும் தனத்தை கொடுத்தும் சில நேரம் பறித்தும் செல்வதால், குபேரயோகத்திற்கு ராகு தொடர்புள்ளவராக இருக்கமாட்டார். இதில், சந்திரன் என்பது மனம் மற்றும் தினம் (ஒவ்வொரு நாளையும்) குறிப்பதாகும். வியாழன் என்பது பெரும் தனத்தையும் தங்கம் மற்றும் பொன் ஆபரணங்களை குறிப்பதாகும். சுக்கிரன் என்பது தனத்தையும் சுகபோகங்களையும் குறிப்பதாக உள்ளது. ஆகவே, சுக்கிரன் மூலம் தனம் வந்தாலும் சுகபோகங்கள் மற்றும் ஆடம்பரத்திற்காக வந்த தனமும் சென்றுவிடும் அமைப்பு உண்டாகிறது.

குபேரயோகம் உள்ளவர்கள் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடையாமலும், சந்திரனை அசுப கிரகங்கள் பார்வை செய்யாமலும் இருக்க வேண்டும். அதுபோலவே, வியாழன் ஜாதகத்தில் அசுப கிரகங்கள் தொடர்பு இல்லாமலும் சந்திரனுடன் நெருக்கமாக தொடர்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும். சந்திரனுக்கு அடுத்த பாவத்தில் உள்ள கிரகம் வலிமையாக ஆட்சியோ அல்லது உச்சம் பெற்று இருக்க வேண்டும். குபேர சம்பத்து என்பது தொடர்ச்சியாக தனம் வரும் வழியை அறிந்து கொள்வதும், தனத்தை சரியான முறையில் கையாள்வதும், தனத்தை தொடர்ச்சியாக முதலீடு செய்வதே ஆகும். இதை செய்வதற்கு ஜாதகத்தில் சந்திரனும் வியாழனும் நல்ல அமைப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டும். சந்திரன் ஆட்சி உச்சம் பெறாவிட்டாலும் சொந்த வீட்டை பார்க்கலாம். வியாழன் ஆட்சி உச்சம் பெறாமல் இருந்தாலும் சொந்த வீட்டை பார்க்கும் அமைப்பாக இருக்கலாம். இதனால், ஜாதகர் தொடர்ந்து முதலீடுகளை செய்வதிலும் முதலீடுகளிலிருந்து தன வரவை உண்டாக்கும் கட்டமைப்புகளை உருவாக்கவும், தொடர்ந்து உருவாகும் தனவரவுகளை பாதுகாக்கும் கட்டமைப்புகளை உருவாக்கவும் முனைந்துகொண்டே இருப்பார்.

இந்த அமைப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் புகழை, முகஸ்துதியை விரும்பமாட்டார்கள். தங்களை எப்பொழுதும் முன்னெடுப்பதைவிட தாங்கள் செய்யும் தொழிலை முன்னெடுப்பதில் கவனமாக இருப்பர். தங்களிடம் நேர்மையற்றவர்களை தண்டிப்பதைவிட விலக்கி வைத்துவிடுவார்கள். பொதுவாக சனியை அசுப கிரகங்கள் என்று எல்லோரும் தள்ளி வைத்து விடுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படியில்லை.  நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பாஸிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி என்பது உண்டு. சனி என்பவன் கர்மங்களுக்கு தண்டனை கொடுப்பவன் அவ்வளவுதான். உங்கள் முற்பிறவியில் கர்மங்கள் குறைவு எனில் தண்டனையும் குறைவு. சனியை சுபகிரகங்கள் பார்வை செய்து, சந்திரனுக்கு அடுத்த ராசியில் சனி இருந்தால், பெரும் தனத்தை கொட்டித் தீர்த்து விடுவான் சனி பகவான். ஜோதிடத்தில், ‘சனி கொடுத்தால் எவர் தடுப்பார்’ என்ற பழமொழி உண்டு. மேலும், சனியால் வருகின்ற தனத்தை எவராலும் அழிக்க முடியாது. எனவே, சந்திரனுக்கு அடுத்து சனி இருந்தால் அவன் பெரும் தனவான்.

The post குபேர யோகம் என்ற பெரும் தனயோகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி