×

பிரதமர் மோடி வருகையையொட்டி கல்பாக்கத்தில் பலத்த பாதுகாப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சென்னை: கல்பாக்கத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பிரதமர் வருகையையொட்டி கடந்த இரு தினங்களாகவே அணு மின் நிலையத்தையொட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் அணு மின் நிலைய வளாகம் மற்றும் அணு மின் நிலையத்தை சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், அணு மின் நிலையத்தையொட்டியுள்ள கடற்பகுதியில் கடலோர காவல் படையினரும், அணு மின் நிலையத்தின் மேல் பகுதியில் வான் படையினரும், வெளிப் பகுதியில் ராணுவம் மற்றும் தமிழ்நாடு போலீசாரும் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வெங்கப்பாக்கம் கூட்ரோடு அணு மின் நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தையொட்டியுள்ள கிராமங்களான கொக்கிலமேடு, மணமை, குன்னத்தூர், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், நத்தமேடு, வெங்கப்பாக்கம், உய்யாலி குப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள கடலில் நேற்று ஒரு நாள் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

The post பிரதமர் மோடி வருகையையொட்டி கல்பாக்கத்தில் பலத்த பாதுகாப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Chennai ,Kalpakkam ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!