×

தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள் சிறப்பு முகாமில் திரண்டனர் விரைவில் தீர்வு காணப்படும் என கலெக்டர் உறுதி பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 5: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள், நேற்று நடந்த சிறப்பு முகாமில் மனு அளிக்க திரண்டனர். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில், ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ₹2 ஆயிரம் வீதம் மொத்தம் ₹6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளுக்கு கடந்த சில தவணைகளாக திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது. அதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிதியுதவி பெறுவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தும், திடீரென ெதாகை நிறுத்தியதால், மீண்டும் வழங்கக்கோரி மனு அளித்தும் பயனில்லை.
ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைக்காததாலும், இ- கேஒய்சி மற்றும் டிபிடி மற்றும் நில ஆவணங்களை இணைக்காததாலும் தவணைத்தொகை நிறுத்தப்பட்டதாக வேளாண் துறை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இப்பணிகளை முடித்தால் மட்டுமே, பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்தனர். இ- கேஓய்சி மற்றும் டிபிடி போன்ற பணிகளையும் நிறைவு செய்தனர். ஆனாலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு தவணைத்ெதாகை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. எனவே, இதுதொடர்பான விண்ணப்பங்கள் அதிகம் வருவதால், இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும் என கடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவித்தார். அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர்வு முகாம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர், அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். அதனால், கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், ஒவ்வொரு மனு மீதும் துறைசார்ந்த விசாரணை நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

The post தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள் சிறப்பு முகாமில் திரண்டனர் விரைவில் தீர்வு காணப்படும் என கலெக்டர் உறுதி பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...