×

ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக நகைக்கடை அதிபரிடம் 350 சவரன் நகை மோசடி: தலைமறைவான தம்பதிக்கு வலை

சென்னை: நத்தம் அருகே ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சென்னையை சேர்ந்தவரிடம் 350 பவுன் நகைகள் மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் தீபக் தேவ்கர் (51). நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை வேப்பேரியில் வசித்து வரும் நண்பர் சஞ்சய் ஜெயின் (52) என்பவரிடம் வட்டிக்கு ரூ.10 கோடி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கமிஷனாக ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கூறியுள்ளனர்.

அதற்கு தீபக் தேவ்கர் என்னிடம் பணமாக இல்லை. அதற்கு பதில் நகைகளாக தருவதாக கூறினார். இதற்கு அவர்கள் சம்மதித்தனர். இந்நிலையில் தீபக் தேவ்கர், சஞ்சய் ஜெயினை தொடர்பு கொண்டு நகைகள் ரெடியாக உள்ளது என கூறியுள்ளார். அதற்கு சஞ்சய் ஜெயின் தனது மனைவியுடன் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து நகைகளை தருமாறும் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த பிப். 21ம் தேதி நத்தம் வந்த தீபக் தேவ்கர், அங்குள்ள பஸ் நிலையத்தில் வைத்து 350 பவுன் நகைகளை தம்பதியிடம் கொடுத்ததாகவும், அதற்கு அவர்கள் 2 நாட்களில் கடன் பெற்று தருவதாக கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் சொன்னபடி கடன் தொகையை வாங்கி தராமல் இழுத்தடித்ததுடன் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த தீபக் தேவ்கர் நேற்று முன்தினம் நத்தம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைகளுடன் தலைமறைவான கணவன்- மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.85 லட்சம் என கூறப்படுகிறது.

The post ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக நகைக்கடை அதிபரிடம் 350 சவரன் நகை மோசடி: தலைமறைவான தம்பதிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Natham ,Deepak Devkar ,Perampur, Chennai ,Sawaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...