×

நாய்கள், மாடுகளுக்கு அடுத்தபடியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் நாய்கள், மாடுகளுக்கு அடுத்தபடியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தெரு நாய்கள் மற்றும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் அடிக்கடி நிகழ்கிறது. சாலையில்சுற்றித் திரியும் மாடு, நாய்களைப் பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என முன்னாள் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் திருவள்ளூர் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், சி.வி.நாயுடு சாலை, ஜெ.என்.சாலை உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கோசாலையில் ஒப்படைத்து எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதே போல் சாலைகளில் சுர்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நாய்கள், மாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது குதிரைகளும் இடம் பிடித்துள்ளன. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளூர் ஜெ.என்.சாலை மற்றும் திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகளில் ஏராளமான குதிரைகள் சுற்றித் திரிவதை நாம் காண முடிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் குதிரை மூலம் யாரும் பயணம் செய்வதில்லை.

குதிரையை வைத்துக்கொண்டு யாரும் எந்த தொழிலும் செய்வதும் இல்லை. நிலைமை இப்படியிருக்க எப்படி சாலைகளில் குதிரைகள் அதிகளவில் சுற்றத்திரிகின்றன என்று மக்கள் குழ்ப்பத்தில் தவிக்கின்றனர். இவ்வாறு சாலையில் செல்லும் குதிரைகள், வாகனங்களின் சத்தத்தால் திடீரென வேகமாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாய்கள், மாடுகளுக்கு அடுத்தபடியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை...