×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நில ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஒப்பந்தம்: கணக்கெடுப்பை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. சில இடங்களில் காலி இடங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இவ்வாறு குத்தகை பெற்றவர்கள், அதற்கான வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். குத்தகை காலம் முடிந்தும் மாநகராட்சி நிலத்தை காலி செய்யாமலும், உரிய வாடகையை செலுத்தாமலும் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதேபோல், ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் பூங்கா உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆக்கிரமிப்பு நிலம் என்ற பேச்சு தொடர்ந்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதும் அந்த நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.1000 கோடி வரை இருக்கிறது. சமீபத்தில் கூட பெரிய கல்வி நிறுவனம், நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல நிறுவனங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து பயன்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து ஆய்வுக்கு சென்று நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலர் மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்கின்றனர். இவ்வழக்கு விசாரணை முடிய நீண்ட காலம் எடுப்பதால் அந்த இடம் மாநகராட்சியின் வசம் சென்றடைய சில, பல காலம் ஆகிறது. இதனால் மாநகராட்சி திட்டமிட்டிருந்த திட்டங்களும் மக்களுக்கு சென்றடைய காலம் ஆகிறது. இவை பல காலமாக தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அதிலும் குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரை கட்டிட பணிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் திறந்த வெளிக்காக மாநகராட்சிக்காக குறிப்பிட்ட அளவில் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதாவது கட்டிடத்தின் மொத்த பரப்பில் 10% நிலத்தை இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடங்கள் வாகனங்கள் நிறுத்தம் இடமாகவும், சிறிய மைதானம், பூங்காக்கள் போன்றவை அமைக்கவும் மாநகராட்சி சார்பில் பயன்படுத்தப்படும்.

ஆனால் ஒரு சில ஓஎஸ்ஆர் இடங்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தை ஆக்கிரமித்து தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகித்து வருகின்றனர். இதுகுறித்தான புகார்கள் கட்டுக்கட்டாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மேஜையில் உள்ளது. இவற்றிற்கு நடவடிக்கை எடுப்பதற்குள் அதிகாரிகள் ஓய்வு பெற்று விடுகின்றனர். ஆணையர்கள் பலரும் மாறி செல்கின்றனர். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க்கும் வகையில், தற்போது சென்னை மாநகராட்சி ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது.

அதாவது, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநகரத்திலிருந்து, சென்னை மாநகராட்சியின் பெயரில் உள்ள 5,786 நிலங்களின் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலங்களின் அளவீடு மற்றும் எல்லைகளை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை அகற்றி முற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கும் பொருட்டு தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து தனியார் மூலமாக இப்பணியை முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி, வட்டார பகுதிகளில் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது எங்கெல்லாம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது, அது பயன்பாட்டில் உள்ளதா… இல்லையா.. என கண்டறிய மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தொடர்ந்து இதர வட்டாரங்களிலும் இப்பணி செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், இந்த பணிகளை ஆமை வேகத்தில் செயல்படுத்தாமல் அசுர வேகத்தில் செயல்படுத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பணிகள் வேகமாக செயல்பட்டால், மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், மாநகராட்சியின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நில ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஒப்பந்தம்: கணக்கெடுப்பை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...