×

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்தது. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகளுடன் அமைச்சர் பரமேஸ்வர் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கர்நாடக மாநில போலீசாருடன் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை), தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த ஓட்டலில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களை தொழில்நுட்ப முறைப்படி ஆய்வு நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மர்மநபர் குறித்த முக்கிய ஆதாரம், தகவல்கள் போலீசாருக்கு சிக்கி உள்ளது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவது உறுதி.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதன் காரணமாக குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா? அல்லது வேகமாக வளர்ந்து வரும் பெங்களூருவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன் வருவதால், குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. மங்ளூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் சில தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இரு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், அதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். இந்தநிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்படைத்துள்ளது. இதனால் குண்டு வெடிப்பு சம்பவ விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

The post பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,NIA ,Union home ministry ,Rameswaram Cafe ,Whitefield, East Bengaluru, Karnataka ,Dinakaran ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு...