×

செல்போனில் பேசி கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை கொன்று சென்னை பெண் தற்கொலை

விக்கிரவாண்டி: செல்போனில் பேசிய கொண்டிருந்ததை கண்டித்ததால் 2 குழந்தைகளை கொன்று விட்டு சென்னை பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாத் (32). இவர் மர இழைப்பகம் கடை வைத்து நடத்தி வருகிறார். சென்னை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெண்ணரசி (29). இவர்கள் இருவரும் சென்னையில் தனியார் அரசு தேர்வுக்கு தயாராகும் அகாடமியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இரு வீட்டாரின் சம்மதத்தோடு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் கிருத்திகா என்ற மகளும், 4 வயதில் மோனிஷ் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பெண்ணரசி அவ்வப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பும் பெண்ணரசி தொடர்ச்சியாக செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அவரது கணவர் கோபிநாத் மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதால் ஆத்திரத்தில் பெண்ணரசியின் செல்போனை பிடுங்கி கோபிநாத் உடைத்துள்ளார். இதனால் பெண்ணரசி மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கோபிநாத் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த பெண்ணரசி, தனது மகள் கிருத்திகா மற்றும் மகன் மோனிஷ் ஆகியோரை துணியால் தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கோபிநாத், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்து பார்த்த போது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post செல்போனில் பேசி கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை கொன்று சென்னை பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Chennai ,Gopinath ,Vikravandi Mariamman Koil Street, Villupuram district ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...