×

தேனியில் புத்தக திருவிழா தொடங்கியது: எட்டு நாட்கள் நடக்கிறது

 

தேனி, மார்ச் 4: தேனியில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. கலெக்டர் ஷஜீவனா புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார். தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டாவது புத்தகத் திருவிழா தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நேற்று மாலை தொடங்கியது. இதனை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். விழாவில் டிஆர்ஓ ஜெயபாரதி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் வக்கீல் மிதுன் சக்கரவர்த்தி, துணை சேர்மன் மணிமாறன், தேனி நகர்மன்ற சேர்மன் ரேணுபிரியா பாலமுருகன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகாஸ்ரீ கலந்துகொண்டனர்.

புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில், 60 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், கலை, இலக்கியம், ஆன்மீகம், சுயசரிதம், வரலாறு என துவங்கி கதை, கவிதை, கட்டுரைகள், புதினங்கள், குழந்தைக்கான சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகங்கள் வரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பதிப்பகங்கள் சார்பில் புத்தகங்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் ரூ. 200க்கான இலவச கூப்பன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா நேற்று முதல் வருகிற 10 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. விழா நடக்கும் எட்டு நாட்களிலும், கலைகளை ஊக்கப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் படைப்பு இலக்கியவாதிகளின் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவின் போது சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்வையாளராக கலந்து கொண்டனர். ரூ.81 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. தற்போது நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும், புத்தக விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தேனியில் புத்தக திருவிழா தொடங்கியது: எட்டு நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Theni ,Book Festival ,Collector ,Shajivana ,second book festival ,Palanisettipatti ,Theni.… ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு