×

வீடு பார்க்கும் பணிகள் தீவிரம்: புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா நிர்மலா சீதாராமன்?

 

புதுச்சேரி, மார்ச் 4: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் வேட்பாளரை பாஜ அறிவிக்கும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதுச்சேரி தொகுதியில் மும்முனை போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.

புதுச்சேரி தொகுதியில் தேஜ கூட்டணியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்வதில் அக்கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அதிமுகவும், தனி கூட்டணியை அமைத்து புதுச்சேரியில் களமிறங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளரான அன்பழகனை வேட்பாளராக நிறுத்த எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, இடதுசாரிகளின் தொகுதிப் பங்கீடு தமிழகத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரி தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற முடிவை எதிர்பார்த்து கட்சிகள் காத்திருக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் எம்பியானார். தற்போது மாநில காங்கிரஸ் தலைவராக அவர் பதவி வகித்துவரும் நிலையில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.

இந்நிலையில், பாஜ சார்பில் போட்டியிட தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்தை நிறுத்த பாஜ மேலிடம் விரும்பியது. இதற்கு முதல்வர் ரங்கசாமியும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் நமச்சிவாயத்துக்கு அமைச்சர் பதவியை கைகழுவிவிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பமில்லை. உள்ளூர் அரசியலில் கோலாச்சி எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது. இந்நிலையில் பாஜ சார்பில் புதுவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த முறை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் போல, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் முக்கியமான இரு இலாகாவை கவனிக்கும் அமைச்சர்கள் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

குறிப்பாக நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்காமல், கொல்லைப்புறமாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து யாரையும் மதிக்காமல் அதிகாரம் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் இந்த முறை அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மேலிடமும் அவருக்கு பாதுகாப்பான தொகுதியை தேடியது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்தேன் என்று நிர்மலா சீதாராமன் அடிக்கடி கூறுவார். மேலும், நானும் தமிழர்தான் என்பார்.

இதனால் அவர் தமிழகத்தில் போட்டியிட தயாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் சவால் விட்டார். தமிழகத்தில் பாஜவை அதிமுக கழட்டி விட்ட சூழலில் தமிழகத்தில் போட்டியிட்டால் அவர் போணியாக மாட்டார் என பாஜ மேலிடம் கருதியது. இதையடுத்து, புதுவையில் அவர் போட்டியிடலாமா என்று ஆலோசனை நடத்தினர். புதுவையில் பாஜ, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், அங்கு போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று மனக்கணக்குப் போட்டுள்ளனர்.

இதற்காக ஒன்றிய உளவுத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர், மேலிடமும் புதுவையில் போட்டியிட வலியுறுத்தியது. இதனால், புதுவையில் தங்குவதற்கு வசதியாக வீடு பார்க்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வீடு பார்த்தவுடன் ஓரிரு நாளில் புதுவைக்கு வந்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் வேட்பாளரை பாஜ அறிவிக்கும் என முதல்வர் ரங்கசாமி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வீடு பார்க்கும் பணிகள் தீவிரம்: புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா நிர்மலா சீதாராமன்? appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Puducherry ,Union Finance Minister ,Puducherry parliamentary seat ,Puducherry Lok Sabha ,BJP ,Chief Minister ,Rangaswamy ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...