×

வெயில் தாக்கத்தால் வேகமாக வறண்டு வரும் வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்ததால் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள வீராணம் ஏரி விளங்குகிறது. சோழர்கள் ஆட்சி காலத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரி 11 கி.மீ நிளமும், 5.6 கி.மீ அகலமும் கொண்டு கடல்போல காட்சியளிக்கும் இந்த ஏரியின் ஆழம் கடல் மட்டத்தில் இருந்து 47.50 அடிகள், கொள்ளளவு 1445.00 மில்லியன் கன அடிகளாக உள்ளது. ஏரிக்கு தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு மூலமாக தண்ணீர் வரும். இது தவிர அரியலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களில் மழை பெய்யும் காலங்களில் கருவாட்டு ஓடை செங்கால் ஓடை ஆகியவைகளின் வழியாக மழைநீர் வரும். கீழ் கரையில் உள்ள 22 பாசன மதகுகள், மேல் கரையில் 6 மதகுகள் வழியாக விவசாய பானத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

ஏரி முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் லால்பேட்டை அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புதிய வீராணம் அணைக்கட்டு மூலமாக உபரிநீர் வெளியேற்றப்படும். இதுதவிர சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய வீராணம் திட்டம் மூலம் வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றிற்கு 63 முதல் 270 மி.கன அடிகள் வரை ராட்சத குழாய்கள் மூலம் உறிச்சி அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது தண்ணீர் வரத்து இல்லாததாலும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்த காரணத்தாலும் ஏரியின் நீர்மட்டம் அதிவேகமாக குறைந்து ஏரி விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கிறது. தற்போது நீர்மட்டம் 6.50 அடியாக உள்ளது.
இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. வழக்கமாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னைக்கு குடிநீர் நிறுத்தப்படும். ஆனால் நடப்பாண்டு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post வெயில் தாக்கத்தால் வேகமாக வறண்டு வரும் வீராணம் ஏரி appeared first on Dinakaran.

Tags : Viranam lake ,Veeranam lake ,Chennai ,Cuddalore district ,Kattumannarko ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, மொரிஷியசில்...