×

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கு கலைப் போட்டிகள் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது

பெரம்பலூர்,மார்ச் 3: கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் கலைத் துறையில் சிறந்து விளங்குகிற 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகள், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதன கோபாலபுரம், 4-வது குறுக்குத் தெரு என்ற முகவரியில் வரும் 9ம்தேதி ஓவியம் மற்றும் கிராமிய நடன போட்டிகளும், 10ம் தேதி குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம் போன்ற போட்டிகளும் காலை 10மணி முதல் நடைபெறும்.

குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், போன்ற கருவி இசைப் போட்டியிலும் தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், பிரிவுகளிலும், இசையினை முறையாக பயின்றவர்கள் பங்கு பெறலாம். பரதநாட்டிய பிரிவில் ஒரு மார்க்கம் தெரிந்தவர்கள் பங்கு பெறலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், , மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப் படும். அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.

ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன் படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வரவேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரைய வேண்டும். அதிகப் பட்சம் 3 மணிநேரம் அனுமதிக்கப் படுவார்கள்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,000, இரண்டாம் பரிசாக ரூ.4,500 மூன்றாம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு 9443377570 என்ற மாவட்ட அரசு இசைப் பள்ளி தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கு கலைப் போட்டிகள் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,Perambalur District Collector's Office ,Tamil Nadu ,Art and Culture Department ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்