×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: பூவுலகின் நண்பர்கள், போராட்ட குழு சந்திப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னையில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், பேராட்டக் குழுவை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலையை மூடியது சரியே என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும், இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்தனர்.

அதன்படி, தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22ம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.65 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* தூத்துக்குடி மக்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சுற்றுச்சூழலுக்கும் தூத்துக்குடி மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கு தூத்துக்குடி மக்கள் சார்பாக வந்திருந்த குழுவினர் நன்றி தெரிவித்தனர். அவர்கள் வைத்த மற்ற கோரிக்கைகள் பற்றி தங்கை கனிமொழி எடுத்துரைத்தார். அவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும்.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: பூவுலகின் நண்பர்கள், போராட்ட குழு சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Friends ,CHENNAI ,of Earth ,Tamil Nadu government ,Camp Office ,Friends of ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...