×

நடுநெற்றிப் பௌர்ணமி 4

புழுதி மண்ணில் விழுந்து, வணங்கியெழுந்து, யாருமற்ற தெருவில் தனியனாய், பரந்த நீலவானில், இலக்கை தேடிப்பறக்கும் ஒற்றைநாரைபோல, பரபரவென நடந்து. தெருமுறையில் திரும்பிக்கொண்டிருந்த குறிஞ்சி தேவனை. வாசலில் நின்றபடி, கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த அமிர்தலிங்கமைய்யர், பெருமூச்சு விட்டார். ‘ஒரே நேரத்தில் இரு பௌர்ணமிப் பிரகாசத்தை இந்தத் திருக்கடவூர், தாங்குமா? தாக்குப் பிடிக்குமா? தெரியவில்லை. ம்ம்ம். இதில் நான் கவலைப்பட என்னயிருக்கிறது அது அபிராமியின் கவலை. அவள் பார்த்துக் கொள்ளட்டும். எண்ணத்தில் நியாயமிருக்கும் தன் பிள்ளைகளை, அவளே இறங்கிவந்து காபந்து செய்யட்டும். அம்மையப்பனே, அமிர்தகடேஸ்வரா, இந்தப் பிள்ளைகளை நீயும் உடனிருந்து காப்பாற்று வழிகாட்டு’ என இந்த உலகில், காலகாலமாய், இனமதபேதமற்ற மனமுள்ள, நல்லவர்கள் செய்கின்ற விதமாய், நெஞ்சுக்கூட்டில் கைவைத்து, கோபுர கலசம் பார்த்து, குறிஞ்சித் தேவனுக்காக பிரார்த்தித்தார்.

குறிஞ்சித்தேவன் வேகமாய் நடந்துபோய், பிரம்ம குளத்துப்படிகளிலும், மயானமருகிலிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் பக்கமும், சுப்ரமணியத்தைத் தேடினான். எங்கும் அவரைக் காணாமல், எங்கு போயிருப்பாரென யோசித்தபடி திரும்பிப் பார்த்தபோது சுப்ரமண்யம் ஆளரவமற்ற திறந்தவௌி மயானத்துப் பாதையின், இடப்பக்கமூலையில், குட்டைப்போன்ற நீர்நிலையினோரம், சக்ரம்போல, அறுகோண, எண்கோணவடிவத்தில்,
குங்குமவண்ணத்து பூக்களாய், நிறையபூத்திருந்த, ஆளுயர மாதுளஞ்செடியின் கீழே, பாறையொன்றில் வேட்டிப் போர்த்திய உடம்போடு, கால்மடித்து அமர்ந்திருந்தார். அவரின் பார்வை, வானத்தின் வடகிழக்கு திசைநோக்கி, அண்ணாந்திருந்தது. வெட்டவெளி நோக்கி, கைகள் கூப்பிய வண்ணம், யாரிடமோ பணிவாக பேசுகின்ற பாவனையில், ‘‘சரி’’ என்கிறவிதமாக, தலையாட்டிக்
கொண்டிருந்தார்.

மயானமருகில் இவரென்ன செய்கிறார் என யோசித்தபடி, முதுகுப் பக்கமாய் நெருங்கிப் பார்க்க, மண்தரையில், கோடுகோடாக, உறிபோல் ஏதோவொன்றை, வரைந்து வைத்திருந்தார். பொதுவாக, நான்கு அல்லது ஆறு கயிற்றுமுனைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் உறியினை. நிறைய கயிற்றுமுனைகளால் இணைத்து, கீழே நெருப்புபோல ஏதோதோ கிறுக்கியிருந்தார்.

என்னயிது… என உற்றுப் பார்த்தபோது, சப்தம் கேட்டு, விரல்களால் மணல் கலைத்தார். ‘‘யாரது” என்பதுபோல வேகமாய் திரும்பிப் பார்த்தார். நிற்பது அவன்தான் என்றதும் சிநேகிதமாய் புன்னகைத்து,
இயல்பாக ‘வா குறிஞ்சித்தேவா’ என்றார்.

‘தன்பெயர் இவருக்கு தெரிந்திருக்கிறதே’ என்கிற ஆச்சர்யத்துடன், குறிஞ்சித்தேவன் அவரை விழுந்து வணங்கினான். நிலம்பட வணங்கியவனை, சிலநொடிகள் உற்று கவனித்து, பின் கண்மூடி நெஞ்சில் கைவைத்து. ஏதோ முணுமுணுத்தபடி ஆசிர்வதித்தார். எழுந்தவனை, அமரும்படி கைகாட்டினார்.

தயக்கத்துடன் அவன் நிற்க, ‘‘பரவாயில்லை உட்கார்’ என்றார் அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சற்று இடைவெளிவிட்டு கீழே அமர்ந்தான்.

‘‘நீ வருவேன்னு தெரியும் சொல்
குறிஞ்சிதேவா. என்ன?’’ என்றார்.

‘ஒண்ணுமில்லே ஐயா’ அவன் தலைகுனிந்தான். தலைகுனிந்து அமர்ந்திருப்பவனையே வெகுநேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சுப்ரமண்யம், மௌனம் கலைத்தார்.

‘குறிஞ்சித்தேவா, உன் ஏக்கம் நானறிவேன். சந்நதியில் யாருமில்லாத நேரங்களில், அன்னை அபிராமியிடமும், அமிர்தகடேஸ்வரரிடமும், நீ தானாக கைநீட்டிப்பேசுவதை, இறைஞ்சுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஒன்றைமட்டும் சொல். ஏன் உனக்கு அபிராமியை அறியவேண்டும் அல்லது பார்க்க வேண்டும்?

அவரின் கேள்விக்கு அவன் கோபமானான். ‘‘ஏனறியக்கூடாது. ஏன் பார்க்கக்கூடாது? அதற்கென தகுதியும், நியதியும் உண்டாயென்ன? என்றான். சுப்ரமண்யம் அவன் கோபத்திற்கு மௌனமானார். எங்கோ வெளிபார்த்து வெறித்தார். மௌனம்தான் அவரது கோபமென்பது சில நொடிகளில் புரிந்து. அவன் வெட்கினான். ‘‘என் கேள்வி தப்புன்னா, மன்னிச்சுடுங்க ஐயா’’ என கைகள் கூப்பினான்.

வெகுநேரம் வானம் பார்த்தபடி அமர்ந்திருந்த சுப்ரமண்யம், அரைநாழிகை கழித்து, தலைதாழ்த்தி, கருணைப் பார்வையுடன் அவனைப் பார்த்தார். பேச ஆரம்பித்தார். ‘‘குறிஞ்சித்தேவா, மனிதனின் உச்சப்பட்ச வளர்ச்சியென்று எதை சொல்லாய்?

அவன் தயங்கினான்.
‘‘பரவாயில்லை, சொல்’’

‘‘மானம் மறைக்க ஆடையில் ஆரம்பிச்சு, மொழியென தொடர்ந்து, அலங்காரம், அணிகலன்கள்ன்னு வளர்ந்து, கடைசியாக நவீனமாய் வெடிமருந்து போர் ஆயுதங்கள் வரை உச்சம்தொட்டி நிக்குது’’

‘‘இல்லை, அதையெல்லாம் இந்த தேசம் எப்போதோ கண்டு விட்டது. இந்த மண்ணில், மனிதனின் உச்சப்பட்ச வளர்ச்சி, கடவுளைத் தேடுகிற ஞானம்தான். எது கடவுள் என்பதை கண்டறிய முயற்சிப்பதுதான். அது இன்றைக்கு ஆரம்பித்ததில்லை. காலகாலம் தொட்டு இந்த பாரதத்தில் தொடர்கிற விஷயம்’’.

‘‘அப்படி தேடுவது, ஒருத்தங்களுக்கு மட்டுமே உரிமையானதா? அவன் கேள்வி தொடர்ந்தான்.

‘‘இல்லை தன்னுள் இறையைத் தேடுதலும், தேடலின் விளைவால், இறைவனை காணுதல் அல்லது உணர்தலும், இங்கு கடவுள் படைத்த அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது அதில் பேதமில்லை. கிட்டத்தட்ட, பரமாத்மாவை தேடுகிற ஜீவாத்மா தத்துவமிது. ஆனால், இங்கு மனிதன் மட்டுமா ஜீவாத்மா? தன்னால் படைக்கப்பட்ட எல்லாஉயிர்களுமே, கடவுளுக்கு ஜீவாத்மா’’

‘‘அதென்ன ஜீவாத்மா பரமாத்மா தேடல்?’’

‘‘புரியவில்லையா? சரி, சற்று எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன். எல்லா உயிர்களையும் படைத்தது இறைவனே என்றால், எவ்வுயிர்களுக்கும், அவன்தானே தகப்பன். தன்தகப்பனை காணவிழைதல், அவனின் பிள்ளைகளுக்கு இயல்புதானே, என் அப்பன் எங்கே அல்லது யார் என்கிற தேடல், எவ்வுயிர்க்கும் நிரந்தர ஏக்கம்தானே. அப்படி தேடிக் கண்டறிந்து சேர்தலே, ஜீவாத்மா- பரமாத்மா தேடல்.’’

‘‘அப்போது, கடவுள்உண்டா என்கிற கேள்வி, என்னைப்போல எல்லா உயிர்களுக்குள்ளும், எழுவதற்கு வாய்ப்புண்டா?’’

‘‘வாய்ப்புண்டு என்றுதான் தோன்றுகிறது. வெறுமனே தின்று கழிந்து, இணையை கூடுகிற ஜீவனாக இருந்தாலும், ஏதேனுமொரு கணத்தில் எழும்புகிற அந்தக் கேள்வி, ஒரு கட்டத்தில், உச்சம் தட்டுமென்றுதான் தோன்றுகிறது. அப்படி உச்சம் தட்டுகிற சமயத்தில், மரமானாலும், மாடானாலும், குயிலானாலும், குரங்கானாலும், தன் கூட்டத்திலிருந்து தனியாகும். தன் இயல்பு குணம் போலில்லாமல், வேறுநிலைக்கு மாறும்.’’

‘‘மரமெனில், நல்ல வெயில் காலத்திலும், மொத்த கிளையும் பச்சைப்பசேலென இளந்தளிராக தளிர்க்கும். மஞ்சள் பூக்களாய் பூத்துக் குலுங்கும். குரங்கெனில் கிளைதாவும் புத்தியொதுக்கி, ஈறுகாட்டி, சீறும் சினம் விலக்கி, சாந்தமாய் தனியே அமரும். தானாய் மடிசுரந்து, காம்புகள் வழியே பால்பொழிகிற பசுவும், ஏதுமுண்ணாது, ஒரு ஏகாதசி நாளில், கருவறையைப் பார்த்து, துதிக்கையை நீட்டியபடி உயிர்
விடும் கோயில் யானையும் அந்தரகமே.’’

‘‘அந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு அடையமுடிவது. மனிதனால் முடியாதா? முடியும். இப்போது உன் கோபக் கேள்விக்கு வருகிறேன். முடியுமெனில், அதற்கு தகுதியென்ன? நியதியென்ன? சத்தியமாய், குலமும், இனமும், மதமும், இதற்கு முக்கியமில்லை. நல்லவனாயிருத்தலே தகுதி. பக்தியுடன் கூடிய ஒழுக்கமும் நேர்மையுமாயிருத்தலுமே நியதி.

‘‘குறிஞ்சித்தேவா. இறைதேடலென்பது பெரும் காட்டுப்பாதை. அங்கு பயணப்பட நினைப்பவர்க்கு. வானம் தரும் வெளிச்சம்மட்டுமே உதவி. அந்த வெளிச்சம்தான் பக்தி. அதன் துணையுடன் புகுந்துப் புகுந்து பயணப்படவேண்டும். அப்படி பயணப்படும்போது, மோகம், பேராசை காமம், குரோதம், மதம், மாச்சர்யம் போன்ற வனவிலங்குகள் எதிர்படும். விரட்டும், துரத்தும், அதற்கெல்லாம் பயப்படாது. உறுதியாக எல்லாவற்றையும் எதிர்கொண்டு தாண்ட, ஒருகட்டத்தில் பால்வெளி வீதியாய், பரவெளியின் வெளிச்சமாய், பிரகாசமாய் இறை தோன்றும், அதன்பிறகு உன்வாழ்வு வேறு’’.

தான் கண்ட கனவையே, சுப்ரமண்யம் வாய்வார்த்தையாய் சொல்வதைக்கேட்ட ஆச்சர்யத்துடன், மற்றுமொரு கேள்வியை, குறிஞ்சித்தேவன் கேட்டான்.

‘‘இங்கு யார் துணைகொண்டு கடவுளை தேட?’’

‘‘மனிதன் இதில் சற்றே உசத்தி. தன் முன்வினைப் பயன்களால், ஐந்தறிவு ஜீவன்கள் அடைகிற இறைத்தன்மையை, அவற்றால் தன் சகஉயிர்களுக்கு கடத்த இயலாது. ஆனால் மனிதனால் இயலும். தான் உணர்ந்த இறைநிலையை, அதை காணத்தவிக்கும் இன்னொரு மனிதனுக்கு, உபதேசவார்த்தையாலோ, தொடுகிறஸ்பரிசத்தாலோ கடத்த இயலும். அதற்கு ‘‘தீட்சை’’ என்று பெயர். அப்படி கடத்துகிறவர்க்கு, கடத்தும்வித்தை அறிந்தவர்க்கு ‘‘குரு’’ என்று பெயர். குருவென்பவர் கிட்டத்தட்ட கடவுளை உணர்ந்த இன்னொரு கடவுள். சாதி, மதபேதம் காணாத இன்னொரு இறை.’’

‘‘ஆனால், ஆளாளுக்கு ஒண்ணு சொல்கிறார்கள். அதையும் தெளிவாக பேசுறதில்ல. மந்திரஉச்சாடனம் என்கிறார்கள். மனசுக்குள் உருப்போடு என்கிறார்கள். சாக்தவழிபாடு என்கிறார்கள். உச்சிநேரத்தில் மயானம் போ, சிவதாண்டவம் பார்ப்பாய் என விரட்டுகிறார்கள். உங்களின் உதாரணப் படியே கேட்கவேணும்னா, இறைதேடல் என்கிற கானகத்துக்கு, எவ்வழியாக செல்ல?’’ குறிஞ்சித்தேவன் சலிப்பாய் பேசினான்.

‘‘கானகத்திற்கு நுழைவாசலென்று தனியே ஒன்றுண்டாயென்ன, எண்திசையும் அதற்கு வாசல்தான். எல்லாப்பக்கமும் அதற்குப்பாதைதான். எண்ணத்தில் உண்மையும், நேர்மையுமிருந்தால் கானகமே உன் பாதையெதுவென வழிகாட்டும். அதில் தயங்காது. கலங்காது. பயப்படாது, நுழையவேண்டும். ஒன்றில்மட்டும் உறுதியாயிரு. முதலில் நல்லவனாயிரு. எளியவழியாய் பக்திகொள். தெய்வம் உண்டென நம்பு. தினமும் இறைதொழு, பெண்மையை தெய்வமாய் மதித்துக்கொண்டாடு. பெண்மையே இவ்வுலகின் பெரும் சக்தியென உணர். இதுவே முதல்நிலை. இதை முழுமையாய் செய்ய, அடுத்தடுத்த நிலைக்கு அதுவே நகர்த்தும், ஒருகட்டத்தில் உன்னை இறுக்கிக்கொண்டதெல்லாம் ஒவ்வொன்றாய் நகர்ந்துபோகும். தட்டினால் உதிரும் கடல்மணலாய்… அவசியமற்றவையெல்லாமே உதிர்ந்து போகும்.’’

‘‘முடிவாக, உண்மையில் இறைதரிசனமென்பது காணுதலில்லை, உணர்தல். காணுதல் முதல்படியெனில், உணர்தல் இறுதிநிலை. இங்கு இறுதிநிலையை கண்டவர் விண்டிலர். ஏன் விண்டிலர்? ஏனென்றால், உணர்தலை வார்த்தையாக்குதல் அத்தனை எளிதில்லை. இன்றைக்கு இதுபோதும், இதற்குமேல் இதை பேசமுடியாது. பேசினாலும் புரியாது.’’ என பேசியதை நிறுத்திய சுப்ரமண்யம். ‘‘குறிஞ்சித்தேவா, என் அருகில்வா’’ என அழைத்தார். அவன் அருகில் வந்ததும், தான் போர்த்தியிருந்த வேட்டியை எடுத்து, அவனுக்கு போர்த்திவிட்டார்.

மஞ்சளும், குங்குமமும் கலந்த வாசனையோடிருந்த அந்த வேஷ்டியை, சுப்ரமண்யம் அவனுக்கு போர்த்தியவுடன், அந்த வெயிலிலும் குளிரெடுத்தது. அவன் நடுங்கினான். வானத்தின்வெளிச்சம் போலொன்று, அவனுக்குள் பரவியது. நீருக்குள் மூழ்கியிருப்பவன் காதுக்குள் ஒலிக்கும் ‘‘பம்மென்ற’’ ஓசைபோல், உடம்பு முழுதும் ஒலித்தது.

குறிஞ்சித்தேவன் மீண்டுமொருமுறை அவரை விழுந்து வணங்கினான். மீண்டும் அவனை சுப்ரமண்யம் எழுந்து ஆசிர்வதித்துவிட்டு, வீடுநோக்கி நடந்துபோனார்.

அப்படி நடந்துபோகிறவருக்கு வழித்துணையாக, குறிஞ்சித்தேவன் வீடுவரை பின்தொடர்ந்தான். அதன்பிறகு இருவரும் அதிகம் சந்தித்துக்கொள்ளவில்லை. ஆனால், சந்நதிக்கு வெளியே, தனியே சந்திக்கும்போதேல்லாம், கேள்விகள் நிரம்பிய குறிஞ்சிதேவனை, சுப்ரமண்யம் நிதானமாக்கினார். இறைதேடலுக்கான நியதிகளை வழிகாட்டினார் தன்பாதையில் குறிஞ்சித்தேவனையும் இணையாக்கிக் கொண்டார். அவனுக்கு மௌனம்பழக்கி, உள்ளுக்குளிருந்த சுடரை தூண்டிவிட்டார். திருக்கடவூரில் நிகழப்போகிற அதிசயம்பற்றி, ஒருநாள் மறைமுகமாய் அறிவுறுத்தினார்.

குறிஞ்சித்தேவனும், சுப்ரமண்யத்தின் பார்வையிலேயே இருந்தான். அம்பாள் சந்நதியில், சுப்ரமண்யம் மோனத்தில் லயித்திருக்கும்போது, யாரும் அவரை தொந்தரவு செய்யாதவாறு, ஓரமாய் நின்று, காவலிருந்தான். சுப்ரமண்யம் கோயிலுக்கு வராதசமயங்களில், காலையில் அமிர்தகடேஸ்வரர் சந்நதியிலும், மாலையில், ஸ்ரீ அபிராமியின் சந்நதியிலும், சுடர்பார்த்தபடி, உள்ளே நோக்கியபடி, பழியாக கிடந்தான். விளக்கு பொருத்தும் இரவுகளில் மாட வீதிகளில் கொழுந்துவிட்டு எரியும், சட்டி விளக்கு நெருப்பை, இமைக்காது பார்த்தபடி இருந்தான். கொஞ்சம்கொஞ்சமாய் பேச்சு குறைத்தான். உணவுகுறைத்து, உடலிளைத்தான். தாடி மழிக்காது, சிகைவளர்த்தான். ஊர் அவனை விநோதமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே. மெல்லமெல்ல பிரகாசமானான்.

ஒருநாள் விடிகாலையில் மாடவீதியில் திகுதிகுவென எறிந்த சட்டிவிளக்கு நெருப்பில், எதையோ கண்டவன்போல, கடகடவென்று சத்தமாய் சிரித்தவனை, அதுவரை வினோதமாக பார்த்த ஊர், அதிர்ந்தது. இன்னொருமுறை அம்பாள் சந்நதியின் சுடர்பார்த்து சிரித்தவனை, சந்நதிவிட்டு வெளியேற்றியது. அடிக்கடி இதுதொடர, ‘‘ஒரு கிறுக்கு போதாதென்று இன்னொன்றா’’ என தலையில் அடித்துக்கொண்டது.

எல்லாமறிந்த சுப்ரமண்யம், ஒருநாள் தன்னை பார்க்கவந்த குறிஞ்சித்தேவனை, பிரம்மதீர்த்தத்து குளத்துப்படியருகே நிற்கவைத்து, ‘‘இனி உன்இடம் இதுவல்ல. கூகாரிகளின் (காகங்கள்) மத்தியில் குயில்கள் வாழத்தகாது. இங்கிருந்து நகர்’’, என்றார்.

மௌனமாய் அவர் சொல்வதை கேட்டுக்கொண்ட தேவன், ‘‘சரி, ஆனால், இந்த ஊர் காணபோகும் அதிசயத்தை, உங்களை கொண்டாடும் அற்புதத்தை காணாமல், நானெங்கே போவது? நானதை பார்க்க வேண்டாமா? என்றான்.

‘‘அவசியமில்லை. அன்று நான் சொன்னது தான். நான் பார்க்கும் நிலவை ஊர் பார்க்கும். ஆனால், நான் உணர்ந்த நிலவை நீமட்டுமே பார்ப்பாய். அதைப்பார்க்க, இங்கிருந்து நகர்ந்து போ’’.
‘‘அருணாசலம் நகரட்டுமா?’’
‘‘வேண்டாம், கடற்கரை யோரமாகவே பயணி. போகிறபாதையெல்லாம், இருக்கிற காவல் தெய்வங்களை வணங்கு. குறிப்பாக தனிச்சந்நதியாய், அம்பாள் குடிகொண்டிருக்கும் கோயில்களில் இரவுதங்கு.’’
‘‘உறவுகளிடம் சொல்லிவிட்டு கிளம்பட்டுமா.’’
‘‘அவசியமில்லை. இனி இந்த அண்டத்தின் பேரன்னையே உனக்கு துணை. நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாயகி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆயகியாதி உடையாள், அவளே இனி உனக்கு சரணும், அரணும். போ. இங்கிருந்து நகர்ந்து அவளை அகண்டமாய் தேடு…
‘‘சரி’’ என்று ஒற்றைவார்த்தை கூறி, காலில்விழுந்து வணங்கி, கிளம்ப முற்பட்டவனை, சுப்ரமண்யம் ‘‘குறிஞ்சித்தேவனாரே’’ என்று அழைத்தார். திரும்பி நின்றவனை இழுத்து, மெதுவாய் அணைத்துக்கொண்டு, முகத்தை அழுத்தமாய் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, ‘‘போய் வாருங்கள்’’ என்றார்.

குறிஞ்சித்தேவன் திருக்கடவூர் விட்டு நகர்ந்தான். பூம்புகார் தொட்டு, கடற் கரையோரம் வழியாகவே பயணித்தான். தாண்டுகிற ஊர்களிலுள்ள கிராமதேவதை சந்நதிகளில், இரவுதங்கினான். அதிக நேரம் கண்மூடி ஆழ்ந்தான். இன்னும் கனிந்தான். பரங்கிப்பேட்டை வழியே, புதுவை தாண்டி, மரக்காணம், திருப்போரூர், வழியாக, திருவொற்றியூர்வரை பயணித்தான். போகிறவழியில், மயிலைமக்களால், சுடுகாட்டு காளி என அழைக்கப்பட்ட, மிகவும் உக்கிரமாயிருந்த ஆறடி உயர பத்ரகாளி கோயிலில் மட்டும், மூன்று நாட்கள் தங்கினான். எதிர்படுகின்ற ஜனங்கள் எல்லாம், மிகவும் கனிந்து போயிருந்த அவனால் ஈர்க்கப்பட்டு, கால்தொட்டு வணங்கும்போது, சலனமற்று நின்றான். திருவொற்றியூரிலிருந்து, அப்படியே மீண்டும் திரும்பி, மாமல்லபுரம் வந்தான். அங்கு சிம்மவாஹனத்தில் அமர்ந்தபடி, அழகானப்புன்னகையுடன் அசுரனோடு போரிடும் மகிசாசுரமர்த்தினி புடைப்புச்சிற்ப மண்டபத்திலேயே, இருந்தான். வெகுநாள் இருந்தான்.

நாட்கள் நகர்ந்தது. மீண்டும் கடற்கரையோரமாகவே நகரலாமென்று, அவன் நினைத்துக் கொண்டிருந்த அந்த தை அமாவாசை நாளன்று, ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு பறந்தன. தடுத்து, என்னவென்று விசாரித்தவர்களிடம், ‘‘அமாவாசையன்று, பௌர்ணமி வரப்போகும் அதிசயத்தை பார்க்கப்போகும்’’ கதைசொன்னது, எப்போதும் வராத சரபோஜி மன்னர். இன்றுகாலை திருக்கடவூர் வந்ததையும், அபிராமியின் சந்நதியில் அவருக்கும் சுப்ரமண்யத்திற்கும் நடந்த அமாவாசை-பௌர்ணமி சம்பாசனைகளையும், ‘‘இன்று பிரகாசப்பௌர்ணமி, நிச்சயம் நிலவும் வரும்’’ என்று கீழே நெருப்பு வளர்த்து.

மேலே உறிமேடையில் நின்று, சுப்ரமண்யம் அந்தாதி பாடப்போகும் மொத்தகதையையும் விழி விரித்துப்பேசியது. ‘‘நிறைஞ்ச அமாவாசைக்கு, பூரண பௌர்ணமியா? எப்படிவரும்? நல்லகதை போ. ஆனாலும் நான்வந்து பாக்குறேன். ஒரு அந்தணன் நெருப்பில் இறங்குவதை எனக்கு பார்க்கணும்’’ என சிரித்தபடி, கடற்கரையோர கிராமஜனங்கள் மாட்டுவண்டிகளில் வேகவேகமாக கிளம்பின.

அத்தனையும் கேட்ட குறிஞ்சித்தேவன், ‘‘என் ஐயா, உமக்கு பட்டாபிஷேகமா’’ என புன்னகைத்தபடி, மண்டபத்திலிருந்து எழுந்துபோய், அலைகளின் இரைச்சல்களுக் கிடையே, பேரமைதியுடன் இருக்கும்.

மல்லையின் கடற்கரைக் கோயில்முன் அமர்ந்து, கண்மூடி, மனதில் சுப்ரமண்யத்தை இருத்தி, ஆழ்ந்து போனான். மெல்லமெல்ல இருட்டை தாண்டி, வெளிச்சம் நோக்கி நகர்ந்தான். ஆழ மூச்சிழுத்து, வெளிவிட்டபடி, நகர்ந்து, நகர்ந்து இன்னும் ஆழமாய் போனான்.

அங்கு திருக்கடவூரில் எந்தசலனமும் இல்லாமல், நெருப்பு சூழ்ந்த உறிமேடையில் நின்றபடி, சுப்ரமண்யம் பரவசமாக அந்தாதி பாடிக்கொண்டிருந்தார். கீழே அந்தணர்கள் அவர் பாடுகிற பாடல்களை குறித்துக்கொண்டிருந்தார்கள்.

மன்னனும், ஊர் மக்களும் ஒவ்வொரு உறியாய் அறுத்துக் கொண்டே அந்தாதி பாடிக் கொண்டிப்பவரையும், நிலவுவருமா என்று வானத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தவேளையில், சரியாக எழுபதொன்பதாவது பாட்டாக, ‘‘விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு’’ என்கிற அந்தாதி பாடிக்கொண்டிருந்த வேளையில், பெரும்ப்ரகாசமாய், முன்பைவிட பூமிக்கு சற்று நெருக்கமாய், நிலவு தோன்றிய அதேநேரத்தில், அதேகணத்தில், கண்மூடி ஆழ்ந்து அமர்ந்திருந்த குறிஞ்சித்தேவனின், உள்ளுக்குள், நடுநெற்றியின் மத்தியில், பால்வெளி வெளிச்சத்தோடு நிலவு தோன்றியது. அந்தநிலவை சுற்றி நீலவண்ணமிருந்தது. நடுநெற்றியில் பரவிய அந்தவெளிச்சம் உடம்பு முழுவதும் வேகமாய் பரவியது.

குறிஞ்சித்தேவன் வெளிச்சம் பரவிய பரவசத்தில் அலறினான். அலறும்போதே, ‘‘நான்பார்க்கும் நிலவை ஊர்பார்க்கும். ஆனால், நான் உணர்ந்தநிலவை நீ மட்டுமே பார்ப்பாய்’’ என்று ஆசிர்வதித்த சுப்ரமண்யத்தை நன்றியோடு நினைத்துக்கொண்டு, ‘‘அபிராமிபட்டரே, அபிராமிபட்டரே’’ என்ற புதுபெயரை வைத்து, அவரை அழைத்தான். வெகுநேரம் நிலவின் பரவசத்திலேயே நின்றான். அந்தநொடியில், குறிஞ்சித்தேவன், குறிஞ்சித்தேவனாரானார்.

பரவசம் தணிந்து, மெல்ல இமைகள் பிரித்து பார்த்தபோது. கடற்கரை கோயில்களின் இரண்டு கோபுரகூம்புகளுகிடையில், பிரம்மோற்சவ உற்சவக்குடையின் அகலத்தில், பளீரென்று பால்வண்ண
வெளிச்சத்தில், நிலவு எழும்பியிருந்தது.

அதன்பிறகு மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில், குறிஞ்சித்தேவனாரை காணவில்லை. காணாமல் போனார், மாமல்லபுரத்தில் வேறெங்கும் அவரை யாரும் பார்க்கவில்லை. மீண்டும் கடற்கரையோரமாகவே பயணித்தவர். எங்கு ஒடுங்கினாரென்றும் தெரியவில்லை.

கடற்கரையோர ஆலயங்களுக்கு சென்று, தெய்வங்களை தரிசித்து வழிபடுவோரெல்லாம், ஒருமுறை குறிஞ்சித்தேவனாரையும் நினைத்துக்கொள்ளுங்கள். அவரையும் மனத்தால் ஒருமுறை வணங்குங்கள். யார் கண்டது?. அங்கு ஏதோ ஒருமூலையில் கூட குஞ்சித்தேவனார் ஒடுங்கியிருக்கலாம்.

குமரன்லோகபிரியா

The post நடுநெற்றிப் பௌர்ணமி 4 appeared first on Dinakaran.

Tags : Kurinchi Devanai ,Amirthalingamaiyar ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3