×

ரயிலில் சுயநினைவு இன்றி இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு

கடலூர், மார்ச் 2: ரயிலில் சுயநினைவு இன்றி இருந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. தாய், சேய் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமுருகன் மனைவி சியாமளாதேவி(33). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான். குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். தற்போது சியாமளாதேவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்ற போது, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்துள்ளது.

இதனால் சியாமளாதேவி அந்த மருத்துவமனையில் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, திருவாரூரில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக சென்னையிலிருந்து திருவாரூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கணவருடன் சியாமளாதேவி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது மகனும் உடன் இருந்தார். விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வந்துபோது சியாமளாதேவிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்க முயன்றனர். ஆனால் ரயில் சிறிது நேரத்தில் புறப்பட்டதால் அவர்களால் இறங்க முடியவில்லை. இதையடுத்து சியாமளாதேவி மயக்கம் அடைந்துள்ளார்.

இது குறித்து ரயில்வே துறையினர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவர் பரமேஸ்வரி மற்றும் மயக்கவியல் நிபுணர் பாஸ்கரன் கொண்ட குழுவினர் சியாமளா தேவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தனர். அந்த பெண் குழந்தை அதி தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், அரசு மருத்துவமனைக்கு வந்து சியாமளா தேவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் டிரைவர், ஊழியர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திமுக மாநகர செயலாளர் ராஜா, மருத்துவர் அணி அமைப்பாளர் பால கலைக்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஆட்சியர் அருண் தம்புராஜ் மருத்துவமனைக்கு சென்று சியாமளா தேவியையும், அவரது குழந்தையையும் நலம் விசாரித்து, ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஊழியர்கள், மருத்துவ குழுவினரை பாராட்டினார். இணை இயக்குநர் டாக்டர் ரவிக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், செவிலியர் கண்காணிப்பாளர் ஜீவா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ரயிலில் சுயநினைவு இன்றி இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Collector ,Arun Tamburaj ,Cuddalore ,Thirumurugan ,Syamaladevi ,Tiruvarur district ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...