×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது: 7.72 லட்சம் மாணவர்கள் எழுதினர்; 3,200 பேர் கொண்ட பறக்கும்படை கண்காணிப்பு; சென்னையில் 180 மையங்களில் 45,000 பேர் எழுதினர்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 7 லட்சத்து 75 ஆயிரத்து 200 மாணவ, மாணவியர் எழுதினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கிற மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. முதல்நாளான நேற்று மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடந்தது. காலை 10 மணியளவில் விடைத்தாள்கள் மாணவர்களிடம் கொடுக்கப்பட்டன. தேர்வர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வர்களுக்கு கேள்வி தாள் கொடுக்கப்பட்டு முதல் 10 நிமிடங்கள் படித்து பார்க்க அவகாசம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 10.15 மணியளவில் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத தொடங்கினர். சுமார் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு மதியம் சரியாக 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது. சென்னை திருவல்லிக்கேணி, எம்.கே. திருமலைப்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த கல்வியாண்டுக்கான, பிளஸ்2 பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் 3,58,201 பேர் மாணவர்கள். 4,13,998 பேர் மாணவியர், மூன்றாம் பாலினத்தவர் 1 அடங்குவர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21875 பேரும் எழுதுகின்றனர். அதேபோல், 125 சிறைவாசிகளும் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர்.

சென்னையை பொறுத்தவரை 405 மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களுக்காக சென்னை நகரில் மட்டும் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல், தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் யாரும் தேர்வுப் பணியில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவின்படி, அனைத்து தனியார் பள்ளி தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 154 கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நிலையான பறக்கும் படையில் 1135 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 43 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் அந்த விடைத்தாள்களை சேகரிக்க 101 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் தமிழ்நாட்டில் 83 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முடிந்த மொழிப்பாடத்துக்கான தேர்வில் தமிழ்ப்பாடத் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதினர். தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் மிக எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, 4ம் தேதி ஆங்கிலப்பாடத்துக்கான தேர்வு நடக்கிறது.

The post தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது: 7.72 லட்சம் மாணவர்கள் எழுதினர்; 3,200 பேர் கொண்ட பறக்கும்படை கண்காணிப்பு; சென்னையில் 180 மையங்களில் 45,000 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai ,Government ,Government Aided Schools ,Self-Finance Boarding Schools… ,Tamil ,Nadu ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...