×

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை இன்று (01.03.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமணையில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கையினை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் ஜெ. குமரகுருபரன் முன்னிலை வகித்தார்.

முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 நாளிட்ட செய்தி வெளியீட்டில், மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண, அயராகு உழைக்கும் ஆசிரிய பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவ பரிசோதனைத் திட்டம் செய்யப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால், 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் உயர் இரத்த அழுத்த பரிசோதைனை, நீரழிவு நோய் பரிசோதனை. இசிஜி பரிசோதனை உள்ளிட்ட 16 வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 1,06,985 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.

திருவல்லிக்கேணி, சென்னை நடுநிலைப்பள்ளியில் 2024 – 25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து சேர்க்கைக்கு வருகை தந்த மாணவ, மாணவியர்களை வரவேற்கும் வகையில் மாலை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சேர்க்கை ஆணைகளை வழங்கி மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப்பைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

அதன் பின்னர் திருவல்லிக்கேணி, என்.கே.டி. மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் மாணவர்களிடம் கலந்துரையாடி கேட்டறிந்தார். நேர்மையான முறையில் பொதுத்தேர்வு நடைபெற தேவையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டுமென ஆசிரியர்களை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் புத்தக விற்பனை பிரிவினை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் விற்பனை நிலையங்கள் துவங்கிட திட்டமிடப்பட்டு முதல் விற்பனை நிலையமாக பாரம்பரியமிக்க புத்தக நிலையமான ஹிக்கின்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில் புதிய விற்பனை பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விற்பனைப் பிரிவில் திசை தோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிப்பெயர்த்த திட்டங்கள், இளந்தளிர் இலக்கியத் திட்டம், நாளையத் தலைமுறைக்கு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் போன்றவை விற்பனைகாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச்செயலர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் ஜெ. குமரகுருபரன், மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர். கஜலட்சுமி, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர், (கல்வி) சரண்யா அரி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் க. அறிவொளி அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்

The post அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Minister of Medicine and Public Welfare ,Subramanian ,Minister of ,Hinduism ,and Social Affairs ,P. K. Shekhar Babu ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...