×

புதிய விமான ஓடுதளம், படகுத்துறை மற்றும் இந்தியா உதவியுடன் மொரீசியசில் 6 வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: மொரீசியல் புதிய விமான ஓடுதளம், படகுத்துறை மற்றும் இந்தியா உதவியுடன் முடிக்கப்பட்ட 6 வளர்ச்சித் திட்டப்பணிகளை பிரதமர் மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத்தும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
மொரீசியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை மற்றும் 6 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத்தும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் பல வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சவால்கள் உருவாகி வருகின்றன. இந்த சவால்கள் அனைத்தும் நமது பொருளாதாரத்தை பாதிக்கிறது. இவற்றை சமாளிக்க கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவும் மொரீசியசும் இயற்கையான கூட்டாளிகளாக உள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு, கூட்டு ரோந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்.

மொரீசியஸ் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பர். இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் நமது நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். எங்களுடைய அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய கூட்டாளியாக மொரீசியஸ் திகழ்கிறது. இந்தியா எப்போதும் தனது நட்பு நாடான மொரீஷியசுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கும். மொரீசியசில் உள்ள சாமானியர்களின் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை ஏற்படுத்துவதே இந்தியாவின் முயற்சிகளின் அடிப்படை நோக்கம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மொரீசியசில் சமீபத்தில் ரூபே கார்டு மற்றும் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையை இந்தியா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

The post புதிய விமான ஓடுதளம், படகுத்துறை மற்றும் இந்தியா உதவியுடன் மொரீசியசில் 6 வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mauritius ,India ,PM Modi ,New Delhi ,Modi ,Pravind Jugnath ,Mauritius' ,Agaleka island ,Dinakaran ,
× RELATED சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்