×

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரமில்லாவிட்டால் வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றத்திற்கு தடையில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பு வாதம்

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றால் வழக்கிலிருந்து விடுவிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு தடையில்லை என்று அமைச்சர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து தாமாக முன் வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில், அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் நேற்று வாதிட்டார்.

அப்போது அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும். வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை அல்ல. மேல் விசாரணை தான் நடத்தப்பட வேண்டும். இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலை பெற்றே மேற்கொள்ளப்பட்டது.

மேல் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை என்று வாதிட்டார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பூமிநாதன், ஏழு ஆண்டுகளாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதி, இந்த ஏழு ஆண்டுகளில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா? 2021ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றியது ஏன்? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை கோரப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் வாதத்திற்காக விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரமில்லாவிட்டால் வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றத்திற்கு தடையில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,Southern State ,CHENNAI ,Minister ,Thangam ,Thangam South ,South ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு