×

வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறல் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்கள்: ஒருவர் கைது; இருவருக்கு வலை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி, 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் அண்ணனை போலீசார் கைது செய்தனர். இதில் மேலும் 2 அண்ணன்களை வலைவீசி தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பெண்டா (40). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய 13 வயது 2வது மகள் அதே பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் இருப்பதாகக் கூறி அவரை ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 24 வாரம் கருவுற்று இருப்பதாகக் கூறினர். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் ராயபுரம் மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது உறவினர்கள் 3 பேர் தன்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக சிறுமி கூறினார்.

இதனையடுத்து ராயபுரம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியின் பெரியம்மா மகனான புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த மனோஜ் (26) மற்றும் பெரியப்பா மகனான அஜய் (22) ஆகிய இருவரும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது சிறுமியை மிரட்டி 2 முறை பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதேபோல் அஜய்யின் தம்பி கண்ணா பண்டா (21) என்பவனும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதில் மனோஜை நேற்று போக்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அஜய், கண்ணா பண்டா ஆகியோரை தேடி வருகின்றனர். அண்ணன் உறவு முறை கொண்டவர்களே சிறுமியிடம் கூட்டு பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பமாக்கிய இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அக்கா கணவர்
பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அவரது அக்கா கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்தவர் ராணி (40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகமது அல்தாப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ராணி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகள் விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 28ம் தேதி இரவு 10ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு வயிறு வீக்கத்துடன் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது தாய் ராணி, மகளை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

அதை கேட்டு தாய் ராணி அதிர்ச்சியடைந்தார். மகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது, தனது அக்கா கணவர் முகமது அல்தாப், வீட்டில் யாரும் இல்லாத போது தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை தகவலின்படி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், முகமது அல்தாப்பை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறல் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்கள்: ஒருவர் கைது; இருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Puduvannarapettai ,Shrikant Benda ,Thangammal Street, Puduvannarappet, Poondi.… ,Dinakaran ,
× RELATED ‘சர்தார் 2’ படப்பிடிப்பின்போது...