×

ரூ.2 கோடி கொடுக்கவில்லை என்றால் தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்: பாஜ நிர்வாகிகள் கைது; மாவட்ட தலைவருக்கு வலை

மயிலாடுதுறை: இரண்டு கோடி ரூபாய் கொடுக்கா விட்டால் தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் உள்பட 4 பேரை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் உள்ளார். தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார்.

அதில்,‘ஆடுதுறையை சேர்ந்த வினோத், தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாக பணியாற்றும் திருவையாறு செந்தில் என்பவருடன் கூட்டு சேர்ந்து தங்களிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச வீடியோ, ஆடியோக்கள் உள்ளது. தாங்கள் கேட்கும் ரூ.2 கோடி பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்கள் மற்றும் டிவி சேனல்களில் ஆபாச வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டு ஆதீன மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம்.
இதுதொடர்பாக திருவெண்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த விக்னேஷ் உங்களிடம் பேசுவார். பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் விக்னேஷ் மூலம் ரவுடிகளை வைத்து மடத்தை சேர்ந்தவர்களை கொலை செய்ய தயங்க மாட்டோம் என்று மிரட்டினார். உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக அவரிடம் தெரிவித்தேன்.

தனியார் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, மயிலாடுதுறையை சேர்ந்த அகோரம், ஸ்ரீ நிவாஸ் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு வினோத் மற்றும் விக்னேஷ் கேட்கும் பணத்தை கொடுத்து பிரச்னையை முடியுங்கள். ரவுடிகளிடம் பிரச்னை வைத்து கொள்ளாதீர்கள் என்றனர். இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்சி ஐஜியின் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு குடியரசு, வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரத்தை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான வினோத் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜ செயலாளர், விக்னேஷ் சீர்காழி ஒன்றிய முன்னாள் பாஜ தலைவர், ஸ்ரீ நிவாஸ் பாஜ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல்வருக்கு ஆதீனம் நன்றி
தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

* மாவட்ட தலைவர் அகோரம் மீது உள்ள நிலுவை வழக்குகள்
மயிலாடுதுறை பாஜவின் மாவட்ட தலைவராக இருப்பவர் அகோரம் (55). இவர் ஏற்கனவே மயிலாடுதுறையை ஒருங்கிணைந்து இருந்த நாகை மாவட்டத்தின் பாமக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு நாகை மாவட்டம் செம்பனார்கோயிலில் மாநில வன்னியர் சங்க துணை தலைவராக இருந்த மூர்த்தி என்பவரை கொலை செய்த வழக்கில் அகோரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளி வந்த அகோரம், 2020ம் ஆண்டு பாஜவின் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். இவர் மீது கொலை, தாக்குதல், கொலை மிரட்டல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, குத்தாலம், நாகப்பட்டினம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன.

The post ரூ.2 கோடி கொடுக்கவில்லை என்றால் தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்: பாஜ நிர்வாகிகள் கைது; மாவட்ட தலைவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Mayiladuthurai ,Darumapura Atheenam ,Srilasree Masilamani ,Gurumaka ,Dharumapuram ,Atheenam ,District ,Dinakaran ,
× RELATED மோடி திறந்து வைத்த நாகப்பட்டினம்...