×

வளர்ச்சிப்பணிகள் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை

பந்தலூர், பிப்.29: நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் குமரிமன்னன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
திமுக கவுன்சிலர் சாந்தி புவனேஷ்வரன்: எனது வார்டு பேக்டரி பள்ளம், இந்திராநகர் போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் முட்புதர்கள் அகற்றம் செய்வதற்கு தூய்மை பணியாளர்களை அலைத்தால் கட்டிங் மெசினுக்கு பெட்ரோல் வாங்கி தாருங்கள்.

அப்போது தான் முட்புதர்கள் அகற்றப்படும் என்கிறார்கள். குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுன்சிலர் ஆலன்: நகராட்சியில் பொறியியல் பிரிவில் போதிய பணியாளர்களை நியமித்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வளர்ச்சிப்பணிகள் முறையாக மேற்கொள்ள வேண்டும். ஏலமன்னா குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லும் குப்பைகள் மறுசுழற்சிக்கு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை நகராட்சிக்கு தெரியாமல் விற்பனை செய்வதாக தெரிகிறது.

கவன்சிலர் முரளிதரன்: எனது வார்டு பகுதியில் டெண்டர் விடப்பட்ட தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கவன்சிலர் புவனேஷ்வரன்: 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னைகள் அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய்கள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் இருக்க நடவடிக்கை தேவை.
கவன்சிலர் பன்னீர்செல்வம்: டெங்கு பணியாளர்கள் நியமிப்பது மறு டெண்டர் விரைந்து முடிக்கவேண்டும்.
கவன்சிலர் ஜாபீர் : அம்மா உணவகத்தில் முறையாக காய்கறிகள் வழங்குவதில்லை. பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆணையாளர்: நகராட்சி நிரந்தர பணியாளர்கள் அப்படி கேட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம் நகராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஒன்றிய மாநில அரசுகளின் நிதி தடையில்லாமல் வருவதற்கு வாய்ப்புள்ளது. நகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவர் சிவகாமி: பொறியியல் பிரிவில் ஓவர்சியர் முறையாக பணிகள் செய்வதில்லை. ஆணையாளர் துரிதப்படுத்தினாலும் பணிகள் நடைபெறுவதில்லை. ஆய்வு செய்து குறைகள் இருந்தால் வேறு ஒப்பந்ததாரர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்களின் முறையான கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post வளர்ச்சிப்பணிகள் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bandhalur ,Nellialam ,Municipality ,Neelgiri District ,Sivagami ,Commissioner ,Kumarimannan ,Dimuka ,Councillor ,Shanti Bhubaneshwaran ,Indranagar ,Dinakaran ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்