×

தெலங்கானா, புதுவை கவர்னர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி, பிப். 29: தெலங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பாஜ தலைவராக இருந்த தமிழிசை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

அங்கு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் சில லட்சங்கள் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அதை தொடர்ந்து அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அத்துடன் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் பதவியையும் கவனித்து வந்தார். இந்த இரண்டு மாநிலங்களிலும் அவர் ஆளுநராக பணியாற்றி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு புதுவையில் அல்லது மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடந்த 3 ஆண்டுகளில் செய்த மக்கள் பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கி வைத்தது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை புத்தகமாக போட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியில் நேரடியாக ஈடுபடுவதற்கு வசதியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதை எடுத்து கூறியுள்ளார். புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ரங்கசாமியின் அனுமதி கிடைத்தால் போட்டியிடலாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் புதுவையில் அவர் போட்டியிட ரங்கசாமி மற்றும் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு இருந்தது. பின்னர் தனது நண்பர்கள் தமிழக தொழிலதிபர்கள் மூலமாக ரங்கசாமியிடம் பேச்சு நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் பேசும்போது, நான் எப்போதும் மக்களுக்காக இருப்பேன். பிரதமர் மோடி மற்றும்  ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன். மக்கள் பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளேன். அதற்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டால் சஸ்பென்ஸ் எனக்கூறி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்.

ஆளுநர் பதவியை விட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழிசை ஆசைப்படுவதாகவும், அதனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளுவதற்கு வசதியாக நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், கவர்னர் தமிழிசையிடம் தேதி கேட்டு பல அழைப்பு கடிதங்கள் வந்துள்ளது. வழக்கமாக புதுவையில் இருக்கும் நாட்கள் வைத்து தேதிகளை வழங்கும் தமிழிசை, தற்போது தேதி கேட்டு அனுப்பிய கடிதங்களுக்கு எந்த தேதியும் கொடுக்கவில்லை. மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு தேர்தல் ஆணையம் வெளியிட உள்ள நிலையில் அதற்கு முன்பு இன்று அல்லது ஓரிரு நாளில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வார் என ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post தெலங்கானா, புதுவை கவர்னர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundararajan ,Governor ,Telangana ,Pudu ,Puducherry ,Puduwai ,BJP ,Tamil Nadu ,Lok Sabha elections ,
× RELATED அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் பாஜவினர் மீது வழக்கு