×

பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி அதிமுகவில் இணைந்த தமாகா மாவட்ட தலைவர்

சேலம்: கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்திருந்த நிலையில் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜ தலைமையிலான புதிய கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. இதனால் ஜி.கே.வாசன் மீது கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் காளிமுத்து, அவரது மனைவியும் கல்பகனூர் ஊராட்சிமன்ற தலைவியுமான ராஜாத்தி உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் தமாகாவில் இருந்து விலகி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

இதுபற்றி காளிமுத்து கூறுகையில், ‘‘மூப்பனாரின் கொள்கைக்கு முரணாக பாஜவுடன் கூட்டணி வைத்ததால் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளோம். கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிளுடன் ஜி.கே.வாசன் கருத்துக்களை கேட்டபோது பலரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஜி.கே.வாசன் பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அதிமுகவில் இணைந்துள்ளோம். மேலும் பல முக்கிய நிர்வாகிகள் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவார்கள்,’’ என்றார்.

The post பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி அதிமுகவில் இணைந்த தமாகா மாவட்ட தலைவர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamaga ,AIADMK ,Salem ,Tamil State Congress ,GK Vasan ,GK ,Vasan ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...