×

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாத துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமர் விளைவு கோட்பாட்டை அறிவித்த நாளான பிப்.28ம் தேதி, தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று, நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பள்ளி மாணவர்களுக்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உயர் கல்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் கல்வியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 51 சதவீதமாக உயர்ந்து உள்ளது. சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை பதிவாளர் மேற்கொண்டு வருகிறார். வருமான வரித்துறைக்குத் தேவையான ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசும், பல்கலைக்கழகத்திற்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்யும்படி உயர் கல்வித்துறை செயலாளர் இரண்டு முறை கடிதம் அனுப்பியும், இதுவரை நீக்கவில்லை. அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், விடுப்பு எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் இல்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாத துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

The post சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Minister ,Raja Kannappan ,Chennai ,Sir ,CV ,Raman ,National Science Day ,
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...