×

ரூ.986 கோடியில் 2 ஆயிரத்து 292 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் ரூ.986 கோடியில் 2 ஆயிரத்து 292 ஏக்கர் பரப்பளவில் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பல்லடம், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மதுரையில் அன்று இரவு தங்கினார்.

நேற்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டார். 9.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கு அவரை ஆளுநர் ஆர்என்.ரவி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் லட்சுமிபதி மற்றும் அமைச்சர்கள், துறைமுக சேர்மன் சுஷாந்த குமார் புரோகித் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கு ஒன்றிய அரசு சார்பில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது அவர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.986 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 292 ஏக்கர் பரப்பளவில் இஸ்ரோ சார்பில் அமையும் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பயணிகள் சிறிய கப்பலையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுக 3ம் கட்ட மேம்பாட்டு பணி, ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 இயந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1477 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4 ஆயிரத்து 586 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர், மொத்தம் ரூ.17 ஆயிரத்து 373 கோடி மதிப்பிலான தொடக்க நிலையில் உள்ள 18 திட்டங்களை தொடங்கி வைத்தும், 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 3 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் மோடி பேசியதாவது: தூத்துக்குடியின் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாடு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டுக்கான வளர்ச்சி பயணத்தை, வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு கொடுத்தே தீரும். தமிழ்நாட்டுக்கும், தென்மாவட்டத்துக்கும் மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்து வருகிறது. வரும் காலத்தில் தமிழகம் இந்த வளர்ச்சி பாதையில் பயணித்து மேலும் வேகமாக முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் உங்களுக்கு மேலும் ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் யஸ்ஷோ நாயக், சாந்தனு தாக்கூர், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கனிமொழி எம்பி, தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த குமார் புரோகித், இஸ்ரோ தலைவர் சோம்நாத், அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* தமிழ் கடவுள் முருகனை புறக்கணித்த மோடி கங்கை, ராமருக்கு புகழாரம்
தென்மாவட்ட மக்களுக்கு உயிர் நாடியாக இருப்பது தாமிபரணி ஆறு. இந்த ஆறு வற்றாத ஜீவ நதி என்பார்கள். தாமிபரணி தண்ணீரை கொண்டு அல்வா செய்வதால் நெல்லை அல்வாவுக்கு தனி சுவை உண்டு என்பார்கள். தமிழ் கடவுளான முருகனுக்கு தமிழ்நாட்டில் 6 படை வீடுகள் உள்ளன. 5 படை வீடுகளில் மலைமேல் முருகன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 2ம் படைவீடான திருச்செந்தூர் மட்டும்தான் கடற்கரையோரம் அமைந்து உள்ளது. இதுவே தனி சிறப்பு. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தலைவர்கள் ஒரு விழாவுக்கோ, பிரசாரத்துக்கு சென்றால் லோக்கல் என்னென்ன உள்ளது, பெருமைகள் என்ன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசுவார்கள். நேற்று நெல்லை, தூத்துக்குடியில் பேசிய பிரதமர், கங்கை நதி மற்றும் ராமரை மட்டுமே உயர்த்தி பேசினார். மறந்து கூட தமிழ் கடவுளான முருகன், தாமிபரணி ஆற்றை பற்றி ஏதுவுமே பேசவில்லை. இது, தென்மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

* அல்வா போல நெல்லை மக்களே…
நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பாஜவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். நெல்லையில் பிரசித்தி பெற்ற அல்வா இனிப்பது போல் இங்குள்ள மக்களும் இனிமையானவர்கள். பாஜவின் அணுகுமுறையும் தமிழக மக்களின் எண்ணமும் ஒத்துப் போகிறது. எதிர்காலத்தை நோக்கிய பாஜவின் சிந்தனையும், மக்களின் சிந்தனையும் ஒன்றுபடுவதால் தமிழக மக்களுக்கு பாஜவின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. இதுபோல் இந்தியா வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி துறையில் வெளிநாட்டுடன் இந்தியாவும் போட்டி போட்டு முன்னேறுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கான வளங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறது. இந்த நாடு புதிய சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழ்நாடு இந்த புதிய சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

* மோடிக்கு கருப்புக்கொடி
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி, நாகர்கோவில், குளச்சல், மார்த்தாண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

* தமிழில் பேச முடியவில்லையே
நெல்லையில் பிரதமர் மோடி பேசுகையில், ‘தமிழில் வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. அப்பப்ப ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன். ஆனாலும் முழுமையாக தமிழ் பேச முடியவில்லை. என் பேச்சு உங்களுக்கு புரியும் படி பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது’ என கூறினார்.

* விழாவுக்கு ரூ.40 கோடி செலவு
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி தூத்துக்குடி வந்ததை முன்னிட்டு ரூ.7.5 கோடி செலவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு கீழ் 13,500 பேர் அமரும் வகையில் சேர்கள் போடப்பட்டிருந்தன. மேடையும், கூட்டத்தினர் அமரும் பந்தலும், வெளியே விஐபிகள் தங்கி, இளைப்பாறி, உணவருந்தும் தற்காலிக கூடம், பிரதமர் வந்திறங்கிய பின் விஐபிகள் சந்திக்க இருந்த இடம் ஆகியவை முற்றிலும் ‘ஏசி’ வசதி செய்யப்பட்டிருந்தது. ஹெலிபேட், மேடை அமைப்பு, வாகனங்கள், பர்னிச்சர்கள், அரங்க அமைப்பு என மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

* அமைச்சர்கள், மேயர் பெயரின்றி அழைப்பிதழ்
தூத்துக்குடி துறைமுகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட விழா அழைப்பிதழில் முதலில் உள்ளூர் எம்பி கனிமொழியின் பெயர் விடுபட்டிருந்தது. அமைச்சர் கீதாஜீவன் பெயரை மட்டும் பிரசுரித்திருந்தனர். பின்னர் மீண்டும் ஒரு அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதில் கீதாஜீவன் பெயரை நீக்கி விட்டு, கனிமொழி எம்பி பெயரை போட்டிருந்தனர். மாவட்டத்தின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் விழா நடந்த தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெறவில்லை.

* அமைச்சர், எம்பி பெயரை உச்சரிக்காத பிரதமர்
தூத்துக்குடி துறைமுகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, கனிமொழி எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, மேடையில் இருந்த ஒன்றிய அமைச்சர்கள் சர்பானந்த் சோனோவால், ஸ்ரீபாத் யஸ்ஷோ நாயக், சாந்தனு தாக்கூர், எல்.முருகன் ஆகியோரது பெயரை குறிப்பிட்டு பேசினார். ஆனால் அமைச்சர் எ.வ.வேலு, கனிமொழி எம்பி ஆகியோரது பெயரை குறிப்பிடாமல் மாநில அமைச்சர், மக்கள் பிரதிநிதி என பொதுவாக குறிப்பிட்டு பேசினார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திய கனிமொழி எம்பியையும், தமிழக அமைச்சரையும் மோடி புறக்கணிக்கும் விதமாக நடந்து கொண்டது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

The post ரூ.986 கோடியில் 2 ஆயிரத்து 292 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : KULASEKARANPATINAM ,RS ,MODI ,Thoothukudi ,Kulasekaranpatnam ,Narendra Modi ,Kerala ,Tamil Nadu ,PM ,Dinakaran ,
× RELATED மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை...