×

‘பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார் சந்திரபாபு நாயுடு’ அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்: நிர்வாகிகள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் பேச்சு

திருமலை: பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் சந்திரபாபுநாயுடு. வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு தராமல் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் பேசியதாவது:

வரும் தேர்தலில், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்க நகைக்கடன், விவசாய கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக சந்திரபாபுநாயுடு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். இவை சாத்தியமா, இல்லையா எனக்கூட யோசிக்காமல் மக்களை நம்ப வைக்க பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார். ஆனால், நாம் அதுபோன்று செய்வதில்லை. சொல்வதை செய்கிறோம், செய்வதை சொல்வோம். எனவே எதிர்கட்சிகளின் விஷம பிரசாரம், பொய் பிரசாரங்களை நாம் தவிடு பொடியாக்க வேண்டும். நமது தேர்தல் அறிக்கை நமக்கு பகவத்கீதை, குரான் மற்றும் பைபிள் போன்றது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு தேர்தல் அறிக்கையை குப்பையாக மட்டுமே பார்ப்பார்கள்.

அவர்களுக்கு ஏழைகள் மீது அக்கறை இல்லை. அனைத்து சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளோம், இவையே இறுதியானவை. ஒவ்வொரு வீட்டிற்கு சென்று நாம் செய்த நல்லதை சொல்லி வாக்கு கேட்கவேண்டும். நமது இலக்கு 175க்கு 175 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனி, எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்காமல் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ‘பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார் சந்திரபாபு நாயுடு’ அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்: நிர்வாகிகள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chandrababa Nayudh ,AP ,Thirumalai ,Chandrababunayudu ,Jeganmohan ,Vijayawada ,R. ,Chandrababu Naidu ,Dinakaran ,
× RELATED கூட்டம் சேர்க்க பணப்பட்டுவாடா: பாஜக...