×

‘ககன்யான்’ குரூப் கேப்டன் பெயரை மோடி அறிவித்த பின் திருமண ரகசியத்தை வெளியிட்ட மலையாள நடிகை: கேரளா திரைத்துறையில் பரபரப்பு

புதுடெல்லி: ‘ககன்யான்’ குரூப் கேப்டன் பெயரை பிரதமர் மோடி அறிவித்த பின், தனது திருமண ரகசியத்தை மலையாள நடிகை லீனா வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு வந்த பிரதமர் மோடி, ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ட்ரைசோனிக் காற்று சுரங்கம், மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த இன்ஜின் மற்றும் நிலை பரிசோதனை மையம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகிய 3 திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லாஆகிய நால்வரும் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு செல்வது அதிகாரப்பூர்வமாக‌ அறிவிக்கப்பட்டது. விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை லீனா என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் இவர்களது திருமண விஷயம் ெவளி உலகிற்கு தெரியவில்லை.

பிரதமர் மோடி பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரின் பெயரை அறிவித்த சில மணி நேரங்களுக்கு பின்னர், நடிகை லீனா வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கடந்த ஜனவரி 17ம் தேதி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருடன் திருமணம் நடந்தது. பிரதமர் மோடி இன்று (நேற்று) இந்திய விமானப்படை போர் விமானியான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை கவுரவித்தார். இது நமது நாட்டிற்கும், நமது கேரள மாநிலத்திற்கும், எனக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜன. 17ம் தேதி திருமணம் நடந்த நிலையில், பிப். 27ம் தேதி தனது திருமண ரகசியத்தை நடிகை லீனா வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘ககன்யான்’ குரூப் கேப்டன் பெயரை மோடி அறிவித்த பின் திருமண ரகசியத்தை வெளியிட்ட மலையாள நடிகை: கேரளா திரைத்துறையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Kaganyan ,Kerala ,New Delhi ,Lena ,Vikram Sarabai Space Centre ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED பழங்குடியின பெண்ணை குடியரசுத்...