×

வெளிநாட்டு தொலைபேசி அழைப்பை உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடி: ஓசூரில் 2 வாலிபர்கள் கைது; உபகரணங்கள் பறிமுதல்

ஓசூர்: ஓசூரில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை, உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக இணையதள இணைப்பு வாயிலாக, சட்டத்திற்கு புறம்பாக மாற்றி பல லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில், 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது.

அங்கு 10க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் வைத்திருப்பதாகவும், செல்போன் இணைப்புகளுக்கு அழைப்புகளை மேற்கொள்வதாகவும் கூறி அதிவேக இணையதள இணைப்பை பெற்றுள்ளனர். அதன் மூலம் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சவுதி உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, இன்டர்நெட் வாயிலாக அதிக நேரம் பேசக்கூடிய அளவிற்கு, உள்நாட்டு அழைப்புகளாக சட்டத்திற்கு புறம்பாக மாற்றி, லட்சக்கணக்கில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை சென்னையில் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு பாதுகாப்பு இயக்குனரகத்தின் உதவி இயக்குனர் விஜய் கண்காணித்து, நுண்ணறிவு பிரிவு துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதன்பேரில், ஓசூர் நகர போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முறைகேடு உறுதியானதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர்களான சாகுல் அமீது (26), அருணாச்சலம் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த தொழில்நுட்ப முறைகேட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 2 கணினி, 2 லேப்டாப், செல்போன்கள், ரவுட்டர் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வெளிநாட்டு தொலைபேசி அழைப்பை உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடி: ஓசூரில் 2 வாலிபர்கள் கைது; உபகரணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri District ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு