×

தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை: தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் சங்கு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது என புகார் எழுந்துள்ள நிலையில் இதுவரை எல்லை வரையறுக்கப்படாததால் ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுக்க உரிமம் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது என்று உத்தரவு அளித்துள்ளார்.

தூத்துக்குடி நாட்டுப்படகு ஏரல் மீன்பிடி தொழிலாளி நலச்சங்க செயலாளர் ஜான்சன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ. கடல்பரப்பில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக மத்திய அரசு கடந்த 1989-ம் ஆண்டு அறிவித்தது. இப்பகுதியில் 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு 14 வகை கடல் புற்களும் அடங்கும்.”

வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்கு சல்லி தீவு, முயல்தீவு உள்ளிட்ட 21 தீவுகளை உள்ளடக்கிய இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்காவாக தமிழக அரசு அறிவித்தது. இந்தச்சூழலில் தூத்துக்குடி மாவட்டக் கடற்கரையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், ஆழ்கடலில் மூழ்கி பாரம்பரிய சங்கு எடுத்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிர்கோள காப்பமாக அறிவிக்கப்பட்ட பிறகும், சங்கு எடுக்க அனுமதி வழங்கி உரிமமம் கொடுப்பதால், அரிய கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால், அதற்கு உரிமம் வழங்கக் கூடாது” என உத்தரவிடக் கோரி தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மன்னார் வளைகுடா பகுதியை கடல்வாழ் உயிர்கோள காப்பகம், தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு உள்ள போதும், இது குறித்த எல்லை இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே, தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்கு எடுக்க மீன் வளத்துறை உரிமம் வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

The post தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Madurai ,High Court ,Madurai Branch ,Tuticorin ,Union Government ,Gulf of Mannar ,High Court Madurai Branch ,Dinakaran ,
× RELATED கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்...