×

அதிமுக மாஜிக்கள், கூட்டணி கட்சிகள் சேராததால் பிரதமர் மோடி கடும் அப்செட்: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி சந்திப்பை ரத்து செய்தார்

சென்னை: பிரதமர் மோடியின் மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரை அழைத்துச் செல்ல முடியாததால், பாஜக மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பையும் மோடி ரத்து செய்தார். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி உடைந்தது.

இதனால் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் இந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தவர்களை இழுப்பதில் இரு கட்சியினருக்கும் இடையே போட்டா போட்டி உருவானது. அதில் முக்கிய கட்சிகளான பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இதுவரை எந்தக் கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை. அதிமுகதான் மாநிலம் முழுவதும் செல்வாக்கான கட்சி என்பதால் அக்கட்சியுடனே கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இரு முறை ராமதாசை சந்தித்துப் பேசினார். அப்போது 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை மற்றும் தேர்தல் செலவுக்கு 70 ஸ்வீட் பாக்ஸ்கள் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் பாஜக தரப்பில் அன்புமணியை அழைத்து 10 சீட் தருகிறோம். தோற்றால் வெளிமாநிலத்தில் மாநிலங்களவை, ஒன்றிய அமைச்சர் பதவி தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் அவர்களது உறுதிமொழியை நம்பக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் ஒன்றிய அமைச்சர் பதவி தரவில்லை என்று ராமதாஸ் கட்சியினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் முடிவு எடுக்க முடியாமல் பாமகவினர் திணறி வருகின்றனர். அதேநேரத்தில் தேமுதிகவும், அதிமுக, பாஜகவினரிடம் 5 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கேட்கின்றனர். ஆனால் இரு கட்சியினரும் மாநிலங்களவை சீட் தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் அவர்களும் கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர்.

அதேநேரத்தில் பிரதமர் மோடி திருப்பூரில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடை ஏற்றுவதாக அண்ணாமலை உறுதியளித்தார். இதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால், அவர் சொன்னபடி பெரிய கட்சிகளான பாமக, தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை. தொண்டர்களே இல்லாத கட்சிகளான தமாகா, புதிய நீதிக்கட்சி, தமமுக, ஐஜேகே ஆகிய கட்சிகளின் தலைவர்கள்தான் கூட்டணிக்கு சம்மதித்தனர். இதனால் அவர்களைத்தான் மேடைக்கு அழைத்துச் சென்றனர். மேடையில் வழக்கமாக கூட்டணித் தலைவர்களைப்பார்த்து கை கூப்பி, அவர்களுடன் பேசும் மோடி, நேற்று வேகமாக நடக்கும்போது ஒரு கும்பிடுபோட்டபடி சென்று விட்டார். யாருடனும் பேசவில்லை. இதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்று மேடையில் அமர்ந்தவர்களே கொஞ்ச நேரம் ஆடிப்போய்விட்டனர்.

அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று பலரிடமும் ஆசை வார்த்தைகள் மற்றும் அமலாக்கத்துறை மூலம் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஒருவர் கூட பாஜகவுக்கு செல்ல மறுத்து விட்டனர். அதோடு மேடை போட்டு திட்டவும் ஆரம்பித்து விட்டனர். இதனால் அண்ணாமலை விரக்தியடைந்தார். மேலிடத்தில் யாரையும் சேர்க்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர்.

இதனால் மேலிடமும் அதிர்ச்சி அடைந்தது. அதேநேரத்தில் பெரிய கட்சிகள் வராததால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோருடனும் இதுவரை அண்ணாமலை பேசவில்லை. பாமக, தேமுதிகவினர் கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு தொகுதி ஒதுக்கியதுபோக மீதம் உள்ள தொகுதிகளை வைத்து இவர்கள் இருவருடனும் பேசலாம் என அண்ணாமலை கணக்குப் போட்டுள்ளார். இதனால் தங்களை கண்டுகொள்ளவில்லை என்று பன்னீர்செல்வமும், டிடிவியும் வருத்தத்துடன் இருந்தனர். இதனால் மதுரையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச நேரம் கேட்டிருந்தனர்.

ஆனால் தமிழக விசிட்டால் மோடியும் அதிர்ச்சியில் இருந்ததால் இவர்கள் இருவரையும் சந்திக்க மறுத்து விட்டார். வருகிற 4ம் தேதி தமிழகம் வரும்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டார். இதனால் 4ம் தேதி வரும்போது பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டும், அதிமுகவில் இருந்து பெரிய ஆட்களை இழுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு புதிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மோடியின் இந்த விசிட் கடும் ஏமாற்றத்தை பாஜக மேலிடத்துக்கு கொடுத்துள்ளதாக பாஜக தமிழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

The post அதிமுக மாஜிக்கள், கூட்டணி கட்சிகள் சேராததால் பிரதமர் மோடி கடும் அப்செட்: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி சந்திப்பை ரத்து செய்தார் appeared first on Dinakaran.

Tags : Modi ,AIADMK ,O. Panneerselvam ,DTV ,CHENNAI ,BJP ,TTV Dhinakaran ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்