×

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.20 லட்சம் முறைகேடு புகார் எதிரொலி

பண்ருட்டி: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் பன்னீர்செல்வம். அதிமுகவை சேர்ந்தவர். 2011 முதல் 2016ம் ஆண்டுவரை இவர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி சத்யா, 2016 முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது ஆணையாளராக பெருமாள் என்பவர் பணியாற்றினார்.

அந்த கால கட்டத்தில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சட்டமன்ற உரிமை குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர், சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி நகராட்சியில் ஆய்வு நடத்தியபோது சைக்கிள் ஸ்டாண்ட் உரிமத்தில் ரூ.20 லட்சம் வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குழுவினர் அளித்த புகாரின்பேரில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறைகேடு நடந்ததை கண்டறிந்தனர். இதுபற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான குழுவினர் இன்று காலை 5 மணியளவில் பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யாவின் வீடு, அலுவலகம், பண்ருட்டி கந்தன்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் நண்பரும், கூட்டாளியுமான பெருமாள் (வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) வீடு, எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் மோகன், பத்திர விற்பனையாளர் செந்தில்முருகா ஆகியோர் வீடுகள், சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பன்னீர்செல்வம், அவரது கூட்டாளிகள் பெருமாள், பத்திரம் செந்தில், எலக்ட்ரிக்கல் மோகன் மற்றும் முன்னாள் ஆணையர் பெருமாள் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டியில் சோதனை நடந்தபோது சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் வீட்டிலேயே இருந்தனர்.அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.20 லட்சம் முறைகேடு புகார் எதிரொலி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,Satya ,Panruti ,Satya Panneerselvam ,Panneerselvam ,president ,Banruti Municipality ,Cuddalore ,AIADMK.… ,AIADMK MLA ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்