×

மசாலாக்களின் மறுபக்கம்…

நன்றி குங்குமம் டாக்டர்

ஏலக்காய்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

Elettaria Cardamomum – Zingiberaeae தாவர குடும்பத்தைச் சார்ந்த ஏலக்காய் இந்திய துணைக்கண்டம் மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்டது. மசாலாப் பொருட்களின் ராணியாகத் திகழும் ஏலக்காய், மைசூர், மலபார், சிலோன், மஞ்சராபாத், பீஜ்பூர் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. குங்குமப்பூ மற்றும் வெனிலாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகவும் விலையுயர்ந்த மூன்றாவது நறுமணப் பொருளாக இருக்கிறது ஏலக்காய்.

ஏலக்காயிலுள்ள சத்துக்கள்

ஏலக்காயில் 311 கலோரிகள், 10.7 கிராம் புரதம், 6.7 கிராம் கொழுப்பு, 0.38 மி.கிராம் கால்சியம், 178 மி.கிராம் பாஸ்பரஸ், 18 மி.கிராம் சோடியம், 13.9 மி.கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஏலக்காயில் பலவகைப்பட்ட phytochemicals என்னும் நுண்சத்துக்கள் இருந்தாலும், Teripinene, Stigmasterol, geranyl acetate, geraniol, citronella, eugenyl acetate போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஏலக்காயின் தனிப்பட்ட நறுமணத்திற்கு 1, 8 cineol என்னும் பொருளே காரணமாக இருக்கிறது.

ஏலக்காயின் மருத்துவப் பயன்கள்

பழங்கால மருத்துவ, உணவு நூல்களில், ஏலக்காயின் நறுமணம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த தகவல்கள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. தைத்ரிய சம்ஹிதா என்ற 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வேதநூலில் ஏலக்காயும் யாகத்தில் (திருமணத்தின்போது) போடப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.

இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில், சிறுநீரகத் தொற்றைக் குணப்படுத்துவதற்கும் உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரோமாதெரபி எனப்படும் நறுமணத்தின் மூலமாக சில சிறு சிறு உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் மருத்துவ முறையில், ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயை மெல்லுவதால், பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதியளிக்கிறது. பாக்டீரியாக்களால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குகிறது. வாயில் துர்நாற்றம் அதிகமாக இருக்கும் நிலையில், சிறிது உப்பு, தலா இரண்டு துளசி மற்றும் புதினா இலைகளுடன் ஒரு ஏலக்காயும் சேர்த்து மென்று பல் துலக்கினால், அழுக்கு, துர்நாற்றம் நீங்கி வாய் மணப்பதுடன், பற்களும் ஈறுகளும் பலப்படும்.

பண்டைய எகிப்தியர்கள், தங்களுடைய பற்கள் வெண்மையாக ஆவதற்கும், மூச்சுக்காற்று நறுமணத்துடன் இருப்பதற்கும், ஏலக்காயை மென்று கொண்டிருப்பார்களாம். பண்டைய கிரேக்கர்களும் ரோமானியர்களும், வாசனைத் திரவியங்களில், ஏலக்காய் பயன்படுத்தினர். புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு ஏலக்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏலக்காய் எண்ணெய்

ஏலக்காய் நன்றாகப் பழுப்பதற்கு முன்பாகவே அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நிறமற்ற எண்ணெய் போன்ற திரவம், முகத்திற்கு வசீகரம் கொடுக்கும் அழகு சாதனப்பொருளாகப் பயன்படுவதுடன், உடலுக்குக் குளிர்ச்சி தரும் பவுடர் தயாரிக்கவும் பயன்படுகிறது. வாய் நறுமணத்திற்காகவும், பல் உறுதிக்காகவும் மெல்லப்படும் சூயிங்கம் தயாரிக்கப் பயன்படுவது மட்டுமன்றி, லெமன் ஆயிலுடன் கலந்து, மரப்பொருட்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றிற்கு பாலிஷ் கொடுப்பதற்கும் பயன்படுகிறது.

ஏலக்காயின் உணவியல் பயன்கள்

நறுமணப் பொருளாக மட்டுமே நாம் ஏலக்காயைத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் ஏலக்காய் பயன்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. அது தெரிந்தால்தான் என்னவோ, பழங்காலத்திலிருந்தே அனைத்து வகை இனிப்புப் பொருட்களிலும் ஏலக்காயைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு ஒரு உதாரணம், சந்தேஷ் எனப்படும் இனிப்பு வகையின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காக, அந்த இனிப்பு தயாரிக்கும் இறுதி நிலையில், பன்னீருடன் ஏலக்காய் பொடியை வெவ்வேறு அளவில் கலந்து ஆய்வு செய்துள்ளனர். அதில், பொதுவாக 15 நாட்கள் கெடாமல் இருக்கும் சந்தேஷ் இனிப்பு, ஏலக்காய் சேர்த்த பிறகு, சாதாரண அறை வெப்ப நிலையில், 28 நாட்களுக்குக் கெடாமல் இருந்ததாக ஆய்வு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏலக்காய் அதிகம் சாப்பிட்டால் என்னவாகும்?

பித்தப்பை மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களும், அவற்றிற்கான மருந்துகளையும் எடுத்துக்கொள்பவர்கள், ஏலக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துணவுகளை (supplements) தொடர்ச்சியாக சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. அப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பின், மருத்துவரிடம் கலந்தாலோசனை பெற வேண்டும். மேலும், ஏலக்காய், ரத்தத்தை இளகுவாக்கி, கர்ப்பகாலத்தில் கருக்கலைப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் ஏலக்காய் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏலக்காய் எண்ணெயோ, அதிலிருந்து பெறப்படும் மருந்துகளோ தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும்போது, குமட்டல், செரிமானமின்மை, வயிற்றுவலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை இருக்கலாம். அவ்வேளையில், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஏலக்காய் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏலக்காய்களை சாப்பிடலாம். பச்சை ஏலக்காயை அப்படியே மென்று சாப்பிடலாம். ஏலக்காய் பொடி என்றால், 250 மி.கிராம் அளவில் எடுத்து, தேன் அல்லது பாலில் கலந்துக் குடிக்கலாம். ஒருவேளை, மருந்தாக எடுத்துக்கொள்பவராக இருந்தால், ஒரே ஒரு ஏலக்காய் கேப்சூல் அல்லது மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். எண்ணெயாக இருந்தால், 2 முதல் 5 துளிகள் மேல்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

ஏலக்காயில் கலப்படம்

ஏலக்காய் போன்று இருக்கும் கருப்பு ஏலக்காய், தரமான ஏலக்காயுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட ஏலக்காய், அதிலிருந்து தயாரிக்கப்படும் பொடி ஆகியவை, தரம் குறைந்த மலிவான விலையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் சேர்க்கப்படுகிறது. எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட ஏலக்காய்கள், வெண்மைநிற பவுடரில் புரட்டப்பட்டும், ஆப்பிள் கிரீன், மாலகைட் கிரீன் போன்ற நிறமிகள் சேர்க்கப்பட்டு தரமுள்ள ஏலக்காய்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. தரமான ஏலக்காய்கள் லேசாக அழுத்திய உடனே, அதன் தனிப்பட்ட நறுமணத்தைக் கொடுக்கும், ஆனால், போலி ஏலக்காயில் அந்த நறுமணம் இருக்காது.

The post மசாலாக்களின் மறுபக்கம்… appeared first on Dinakaran.

Tags : Dr. ,Cardamom ,Vandarkuzhali Elettaria ,Indian subcontinent ,Indonesia ,Mysore ,Malabar ,Ceylon ,Manjarabad ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!