×

வியாபாரிகள் வாங்க வராததால் தஞ்சாவூர் பகுதி வயல்களில் தேங்கிகிடக்கும் வைக்கோல் கட்டுகள்

*விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் : வியாபாரிகள் வாங்க வராததால் தஞ்சாவூர் பகுதியில் வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி செய்யப்படும். இதற்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைந்து வயல்களில் அறுவடை பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது.

தஞ்சை, திட்டை, வரவுக்கோட்டை, தஞ்சை-கும்பகோணம் சாலை பகுதி, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை முடிந்த வயல்களில் வைக் கோல்கட்டும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதுகுறித்து விவசாயி கூறுகையில்: சம்பா அறுவடை பணிகள் முடிந்து வைக்கோல்களை கட்டும்பணியில் ஈடுபட்டு வருகிறோம். வைக்கோல்களை கட்டுவதற்கு எந்திரங்களை பயன்படுத்துகிறோம். எந்திரம் மூலம் ஒரு வைக்கோல் கட்டு கட்டுவதற்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கொடுக்கிறோம்.

வழக்கத்தை விட இந்த ஆண்டு தஞ்சை பகுதிகளில் வைக்கோல் கட்டுகள் அதிகளவில் உள்ளன. பொதுவாக தஞ்சையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் வைக்கோல் கட்டுகள் கொண்டு செல்லப்படும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வைக்கோல் கட்டுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே விளை நிலங்களில் தேங்கி உள்ளன. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை, பூச்சி தாக்குதலின் எதிரொலியாகவும் வியாபாரிகள் வைக்கோல் கட்டுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

மேலும், வைக்கோல் கட்டுகள் ரூ.60 முதல் ரூ.80க்கு விற்பனை செய்தாலும், வியாபாரிகள் வாங்க முன் வருவதில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி மாடுகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருவதும் இதற்கு மற்றொரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

The post வியாபாரிகள் வாங்க வராததால் தஞ்சாவூர் பகுதி வயல்களில் தேங்கிகிடக்கும் வைக்கோல் கட்டுகள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...