×

தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மீன் பிடிக்க தொழிலாளர்கள் ஆர்வம்

* கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்பனை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மீன் பிடிக்க தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் தொழிலாளர்கள் மீன் பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பிடிபட்ட மீன்களை 1 கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்படும். இந்த தண்ணீரை கொண்டு காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என 3 போக நெல் சாகுபடி செய்கின்றனர்.இந்த நிலையில் போதிய நீர் இல்லாததால் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவிரி, வெண்ணாறு கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் குறைந்த அளவே இருக்கிறது. ஒரு சில ஆறுகளில் நீர் குட்டை போல தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மீன் பிடிப்பதற்காக தொழிலாளர்கள் ஆறுகளை நோக்கி படை எடுக்க தொடங்கி உள்ளனர்.

காலை முதல் மாலை வரை தஞ்சையில் உள்ள ஆறுகளில் குழுக்கள், குழுக்களாக தொழிலாளர்கள் ஆற்றுக்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர்.குறிப்பாக கல்லணைக் கால்வாய் எனப்படும் புது ஆற்றில் தொழிலாளர்கள் மீன் பிடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக வீசு வலை, கட்டு வலைகளை பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்கள் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கட்டு வலைகளை இரவில் கட்டி செல்கின்றனர்.பின்னர், காலை நேரத்தில் வந்து வலையில் சிக்கிய மீன்களை விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர். இதே போல வீசு வலை வீசுபவர்களும் அதிகளவில் மீன்களை பிடிக்கின்றனர்.

குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் மீன்களும் அதிகளவில் பிடிபடுகின்றன. அவற்றை மொத்தமாக எடுத்து தரம் பிரித்து குடியிருப்பு பகுதி, சந்தை பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மீன்களின் தரத்துக்கு ஏற்ப 1 கிலோ மீன் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்கிறார்கள். மீன்களை பொதுமக்களும் ஆர்வ முடன் வாங்கி செல்கின்றனர்.

The post தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மீன் பிடிக்க தொழிலாளர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Kallani Canal ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...