×

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ₹7 கோடியில் அமைக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்

*ஆட்சியருக்கு கோரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லை பகுதியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து உள்நோயாளியாகவும், சிலர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தலை பகுதி, கழுத்து பகுதி, இடுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இலவச சிகிச்சைக்கு வருகின்றனர்.

அதில் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை துள்ளியமாக தெரிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வர வேண்டி அரசு மருத்துவர்களின் பரிந்துரை கடிதத்தின் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க சென்றால் குறைந்தபட்சமாக ரூ.4,500 முதல் ரூ.7,000 வரை வசூல் செய்கின்றனர். இந்த தொகை செலுத்தி எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க முடியாத பொதுமக்கள் முறையான சிகிச்சை பெற முடியாத நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள நோயை குணப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது. மேலும் அதிக பணத்தை செலுத்தி எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க முடிந்த நோயாளிகள் மட்டும் முறையான சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து 11 மாதங்கள் ஆகிறது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் வகையில் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைத்திட சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ரூ.7 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தரை தளத்தில் உள்ள ஒரு பகுதியில் புதியதாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் புதியதாக அமைக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் மக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ரூ.2,500 என அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளவர்கள் இலவசமாகவும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். எனவே எம்.ஆ.ர்ஐ. ஸ்கேன் வசதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ₹7 கோடியில் அமைக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Government Medical College Hospital ,Governor ,Kallakurichi ,Siruvangur ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...