×

கொல்லம் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை

*குழந்தைகள் கண்ணெதிரே கொடூரம்

திருவனந்தபுரம் : கொல்லம் அருகே குழந்தைகள் கண்ணெதிரே கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்டு காதலனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் அருகே உள்ள தடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். அவரது மனைவி சிபி (37). இந்த தம்பதிக்கு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். உதயகுமார் துபாயில் பணி புரிந்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்தவர் பிஜு (47). இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிஜுவுக்கும், சிபிக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் இவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பண விவகாரத்தில் பிஜுவுக்கும், சிபிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிபியின் வீட்டுக்குச் சென்ற பிஜு தகராறு செய்தார். அப்போது சிபியின் 2 குழந்தைகளும் அங்குதான் இருந்தனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிஜு, சிபியை படுக்கையறைக்கு இழுத்துச் சென்றார். பின்னர் தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதன்பின் தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இருவரது உடலிலும் தீப்பற்றிய நிலையில் வீட்டுக்குள் அங்கும் இங்கும் கதறியபடி ஓடினர். கண்ணெதிரே நடந்த இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் இருவரும் வீட்டைவிட்டு வெளியே சென்று உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் பிஜுவும், சிபியும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். இது குறித்து அஞ்சல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அஞ்சல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொல்லம் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kollam ,Thiruvananthapuram ,Thadikadu ,Kerala ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...