×

நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியது

*இரு கட்டங்களாக அதிவிரைவு வெள்ளோட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்ைட ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதற்கான முதற்கட்ட அதிவிரைவு வெள்ளோட்டம் இன்று மேலப்பாளையம் – திருநெல்வேலி இடையே நடக்கிறது. 2ம் கட்ட வெள்ளோட்டம் நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே 15ம் தேதி நடக்க உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்பு பாதை வழித்தடங்கள் உள்ளன. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும்.

இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் சென்று வருகின்றன. இதில் சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும் செயல்படுத்தப்படுகிறது. ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி இடையிலான பணிகள் முடிவடைந்து விட்டன.

மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையிலான 102 கி.மீ. தூர திட்ட பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் பாதையில் ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் பகுதிகளில் மட்டும் பணிகள் பாக்கி இருந்தன. இதில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாள பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடந்துள்ளது.

நாகர்கோவில் – திருநெல்வேலி வழித்தடத்தில் திருநெல்வேலி சந்திப்பு – மேலப்பாளையம் இடையே மட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பகுதியில் தண்டவாள இணைப்பு பணிகள் கடந்த 20ம்தேதி தொடங்கியது. இன்று (28ம் தேதி) இந்த பணிகள் முடிவடைய உள்ளன. இதையடுத்து இன்று (28ம்தேதி) இந்த வழித்தடத்தில், அதி விரைவு ரயில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இன்று (28ம்தேதி) மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு சிறப்பு ரயிலை கொண்டு அதி விரைவு வெள்ளோட்டம் நடக்க இருக்கிறது.

மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு நிலையங்கள் இடையே புதிய அகல இரட்டை வழித்தடத்தில் இந்த அதி விரைவு ரயில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதால், மேற்கூறிய ரயில்வே லைன்கள் அருகில் அணுகுவதோ, எல்லை மீறி நுழைவதோ கூடாது என ரயில்வே கேட்டுக் கொண்டு உள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம், பெங்களூரு) மேற்பார்வையில் இந்த வெள்ளோட்டம் நடக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (மார்ச்) 15ம்தேதி நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே அதி விரைவு ரயில் வெள்ளோட்டம் நடக்க இருக்கிறது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே ரயில் இன்ஜின் 110 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற்று உள்ளது. சிறப்பு ரயில் சோதனை மட்டும் நடத்தப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்பார்வையில் நடக்கும் வெள்ளோட்டம் திருப்தியாக இருந்தால் இரட்டை ரயில் பாதை வழிதடத்தில் ரயில்கள் இயங்கும் என தெரிகிறது.

நாகர்கோவில் – திருநெல்வேலி – மணியாச்சி இடையே இரட்டை ரயில் பாதைக்காக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில்கள் ஓட தொடங்கினால், தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அதிக ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும். மேலும் ஐதராபாத் – தாம்பரம் இடையே இயக்கப்படும் சார்மினார் ரயில், நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது. மேலும் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக திருவண்ணாமலை, திருப்பதி செல்லும் வகையில் ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

லிப்ட் அமைக்கும் பணி விறுவிறு

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் நடைமேடை இரண்டில் வரும் ரயிலில் ஏறி இறங்கும் பயணிகள் லக்கேஜ் உடன் படிக்கட்டு வழியாக ஏறி இறங்கி வர வேண்டியுள்ளது. இதனால் மாற்று திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், வீல் சேரில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே துறை மின் தூக்கியை (லிப்ட்) நிறுவ முடிவு செய்துள்ளது.

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகளிலும் தலா ஒரு மின்தூக்கி வீதம் அமைக்கப்பட உள்ளன. தற்போது இதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. லிப்ட் பொருத்துவதற்கான கட்டுமான பணிகள் 40 சதவீதம் வரை முடிவடைந்துள்ளன. இயந்திரங்கள் பொருத்தும் பணி அடுத்த கட்டமாக நடக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.

கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் இடையே பணிகள் நிறைவு

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளை பொறுத்தவரை நில ஆர்ஜிதம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 87 கி.மீ பாதையை இரு வழிபாதையாக மாற்றும் பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த திட்டத்துக்காக கேரளாவில் திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 35.2 ஹெக்டரும், அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி வரை தமிழ்நாடு பகுதியில் 47.73 ஹெக்டரும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டி உள்ளது.

இதில் தமிழ்நாடு பகுதியில் நில ஆர்ஜித பணிகள் மந்த கதியில் நடந்து வந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் நில ஆர்ஜித நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக தனி தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது நாகர்கோவில் டவுன் – குழித்துறை இடையே நில ஆர்ஜித பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நில ஆர்ஜித பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதில் ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன.

The post நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tirunelveli ,Melapalayam ,
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?