×

சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்

*கடித்து குதறியதில் 12 ஆடுகள் பலி * கிராம மக்கள் பீதி

காடையாம்பட்டி : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை புலி கடித்து குதறியதில் 12 ஆடுகள் பலியான சம்பவத்தால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி ஊராட்சி பாலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவர், தனது வீட்டிற்கு அருகே ஒரு பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் 4 ஆடுகளும் கடித்து குதறப்பட்ட நிலையில், இறந்து கிடந்தன. இதையடுத்து, அக்கம் -பக்கத்தில் தகவலறிந்து மக்கள் அங்கு திரண்டனர். அப்போது, பெருமாள் வீட்டிற்கு அருகே தோட்டத்தில் மர்ம விலங்கு நடமாடியதற்கான அறிகுறி தென்பட்டதை கண்டு திடுக்கிட்டனர். மர்ம விலங்கின் காலடி தடங்கள் அங்கு பதிவாகியிருந்தது. அதனை வைத்து பார்க்கும்போது, குட்டியுடன்- தாய் சிறுத்தை புலி ஊருக்குள் புகுந்து, பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை கடித்து குதறியிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறையினர் பாலிகாடு பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதேபோல், 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் பழனிசாமி ஆகியோரது கொட்டகைக்குள் புகுந்து மர்ம விலங்குகள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூசாரிப்பட்டி ஊராட்சி மூக்கனூரில் கரடு பகுதியில் முகாமிட்டிருந்த சிறுத்தை புலி, தற்போது மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டு, சிறுத்தை புலியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kadaiyambatti ,Salem district ,
× RELATED சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின்...