×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை

திருச்சி. பிப்.28: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட திமுக வாக்குச்சாவடி பாகமுகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி பாகமுகவர்களின் கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் சட்டமன்ற திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாகமுகவர்களுடன் (BLA 2), வட்ட கழகம், கிளை கழகம் ஆகியவற்றின் செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக அரசின் சாதனைகளை குறித்து துண்டு பிரசுரங்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி என பல்வேறு திட்டங்கள் திமுக அரசின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது.

அவற்றை மக்களிடம் `இல்லம் தேடி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வாக்குச்சாவடி முகவர்களைக் கொண்டு திமுக பரப்புரையாக எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சாதனைகள், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை வீடு வீடாக சென்று துண்டறிக்கையாகவும் வழங்கி வருகிறார்கள். அரசின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதற்குரிய ஆலோசனைகளை கழக முன்னோடிகள் வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அதலை செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா, காஜாமலை விஜி, இளங்கோ, நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : DMK ,Trichy ,Trichy West ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியீடு