×

பெண்கள் பெயரில் 5 வங்கிகளில் ₹1 கோடி வரை பெற்று மோசடி பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் எஸ்பி ஆபீசில் புகார் மகளிர் குழு கடன் வாங்கி தருவதாக கூறி

வேலூர், பிப்.28: வேலூரில் மகளிர் குழு கடன் பெற்று தருவதாக கூறி, பெண்கள் பெயரில் 5 வங்கிகளில் ₹1 கோடி வரை பெற்று மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
ேவலூர் எஸ்பி அலுவலகத்தில் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த பானு என்பவர் நேற்று புகார் மனு அளித்தார். அதில், ‘எனது ஆவணங்களை பயன்படுத்தி எங்கள் ஊரை சேர்ந்த பெண் ஒருவர் 5 வங்கிகளில் ₹89 ஆயிரம் வரை கடன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். எனவே என் பெயரில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

அதேபோல் சைதாப்பேட்டையை சேர்ந்த சாந்தினி என்பவர் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் வசித்து வந்த பெண் ஒருவர் எங்களது ஆவணங்களை பெற்று 4 வங்கிகளில் ₹1.49லட்சம் கடன் வாங்கியுள்ளார். வங்கிகளில் இருந்து எங்களிடம் பணம் கட்ட சொல்கின்றனர். எனவே கடன் பெற்ற பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். அதேபோல் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக எங்களுடைய ஆவணங்களை பெற்று சுமார் ₹1கோடி வரையில் மோசடி செய்து பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்று மனு அளித்தனர்.

இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பொதுமக்கள் கூறியதாவது: வேலூர் ஆர்.என்.பாளையம், கஸ்பா, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில், ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நான் மகளிர் குழு மூலம் வங்கி கடன்பெற்றுத் தருகிறேன் என்று கூறினார். அதனை நம்பி எங்கள் ஊரில் உள்ளவர்கள் பலர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் கொடுத்தோம். அதன்படி ஒரு முறை கடன் வாங்கி கொடுத்தார். பின்னர் நாங்களும் சரியாக கடனை செலுத்தினோம். இந்நிலையில் 2வது முறையாக கடன் வாங்கி தருகிறோம் என்று ஆதார், வங்கி புத்தகம், ஏடிஎம் கார்டு வாங்கிக்கொண்டார். நாங்களும் நம்பி கொடுத்தோம். ஆனால், கூறியபடி கடன் பெற்றுத்தரவில்லை. உங்களுக்கு கடன் இந்த முறை கிடைக்கவில்லை என்றார். ஆனால் எங்களுக்கு தெரியாமல் அவர் பல வங்கிகளில் சுமார் ₹1 கோடி வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் வங்கியாளர்கள் எங்களிடம் கடன் பெற்றுள்ளீர்கள், அதனை திரும்ப செலுத்த வேண்டும் என்கின்றனர். இதையடுத்து மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்ணை தேடிச்சென்றால் அவர் தலைமறைவாகியது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பெண்கள் பெயரில் 5 வங்கிகளில் ₹1 கோடி வரை பெற்று மோசடி பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் எஸ்பி ஆபீசில் புகார் மகளிர் குழு கடன் வாங்கி தருவதாக கூறி appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Vellore ,RN Palayam ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...