×

தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வழிமுறை: கால அட்டவணை வெளியீடு

சென்னை: தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை:
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணை கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 7ம் தேதி தொடக்க கல்வி இயக்குநர், அரசுக்கு எழுதிய கடிதத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதை ஏற்று மேற்கண்ட பணியிடங்களை நிரப்பும் போதுபின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் பணி மே 1ம் தேதிக்குள்ளும், உபரி இடைநிலை ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் மே 31க்குள்ளும், அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் ஜூன் 30ம் தேதிக்குள்ளும் செய்ய வேண்டும்.

மேலும், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட மதிப்பீடுகள் ஜூலை 1ம் தேதிக்குள், காலிப்பணியிடங்கள் நிரப்பக் கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதை ஜூலை 15க்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். நேரடி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு அக்டோபர் 31க்குள் வெளியிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஜனவரி 31க்குள் தேர்வு நடத்த வேண்டும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30க்குள் வெளியிட வேண்டும். சான்று சரிபார்ப்பு மே 1ம் தேதி தொடங்கி மே 31க்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் அரசாணையில் ெதரிவித்துள்ளார்.

The post தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வழிமுறை: கால அட்டவணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,School Education Department ,Primary Education Department ,Principal Secretary ,School ,Education ,Kumaraguruparan ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை